டங்ஸ்டன் சுரங்கம் : திருமாவளவனிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர்

Published On:

| By christopher

'Tungsten mine will not be built without approval': Union Minister assures Thirumavalavan

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டுமென திருமாவளவன் இன்று (டிசம்பர் 10) கோரிக்கை மனு அளித்த நிலையில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எதுவும் செய்யாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை மத்திய அரசு அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக நேற்று நடந்த விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சிகள் பார்வையில் அலட்சியமாகவும், நாங்கள் தவறிவிட்டோம் என்றுகூட இருக்கலாம். ஆனால், எங்களுடைய பார்வையில் இந்த பிரச்சினையை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறோம்.

எந்த காரணத்தை கொண்டும் இந்த திட்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதனை தடுத்து நிறுத்துவோம். நான் முதல்வராக இருக்கும் வரை நிச்சயமாக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டுவர முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்” என ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை இன்று டெல்லியில் சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளன். அப்போது மதுரை மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் “டங்ஸ்டன் சுரங்கம்” அமைப்பதைக் கைவிட வேண்டும் கோரிக்கை மனு அளித்தார்.

தீர்மானம் பார்வைக்கு வந்துள்ளது!

அதனைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனது பார்வைக்கு வந்துள்ளதாகவும், தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம். கவலை வேண்டாம் என்றும் கிஷன் ரெட்டி தெரிவித்ததாக திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

‘கல்வி உதவி தொகை வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும்’ : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

25 Years of Bala : தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தை காட்டிய பாலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share