மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் இன்று (டிசம்பர் 9) கொண்டு வந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் 7 மலைகளை உள்ளடக்கிய பகுதி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கு தமிழ்நாடு அரசும், பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் சுரங்கத்தின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.
அதில் “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி, மத்திய அரசு ஏலம் விடக்கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது, மத்திய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.
இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ் சின்னங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.
இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளதை, தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், இப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே வலியறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்கிறோம். மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தை வழங்கக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒருமனதாக இந்த பேரவை தீர்மானிக்கிறது. ” என்று முன்மொழிந்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புதுவை முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
’செய்யலைன்னா செய்யலைனுதான் சொல்ல முடியும்…’ -சட்டமன்றத்தில் வேல்முருகன்- அப்பாவு வாக்குவாதம்!