அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் தெளிவான கருத்தை தெரிவித்திருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியுடன் எனக்குத் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு கிடையாது என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக நிர்வாகித் திருமண விழாவில் இன்று (ஆகஸ்ட் 24) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, ” நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில், அமமுக ஓர் அணிலைப் போல செயல்படும்.
அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் தெளிவான ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அவருடைய கருத்தை நான் வரவேற்கிறேன். அதிமுகவில் உள்ள சில துரோகிகள் திருந்தினால் தான் அனைவரும் இணைந்து செயல்பட முடியும்.
சமூக நலத்திட்டங்கள் என்பது மக்களுக்குத் தேவையானது. அதே சமயம், ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, தேர்தல் நேரங்களில் இலவச திட்டங்களை சில கட்சிகள் அறிவிக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளார்கள்.
உச்சநீதிமன்றத்தின் கருத்தை நான் வரவேற்கிறேன்.
மக்கள் பெரிய எதிர்பார்ப்புடன் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி திமுகவை ஆட்சியில் அமரவைத்தார்கள்.
மக்களை ஏமாற்றும் விதமாகத் தான் திமுக ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கான பலனை அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அனுபவிப்பார்கள்.
அமமுக பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். இதுகுறித்து 2023 இறுதியில் பார்க்கலாம்.
எடப்பாடி பழனிசாமியுடன் எனக்குத் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. அவருடைய குணாதிசயத்தை தான் நான் திரும்ப திரும்ப கண்டிக்கிறேன்.
மற்றபடி தனிப்பட்ட முறையில் நான் யாருடனும் எந்த கட்சியுடனும் விரோதம் வைத்துக்கொள்வது கிடையாது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு தான் சரியானத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு தான் உச்சநீதிமன்றத்திலும் தொடரும்.” என்றார்.
டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்படுவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“செய்நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி. நம்பிக்கை துரோகம் என்பது ஒரு அறுவருக்கத்தக்க குணாதிசியம்.
வேறு எந்தத் தவறு செய்தாலும் மறந்து விடலாம். செய்நன்றி மறந்தவர்களுக்கு நிச்சயமாக தண்டனை உண்டு.
இறைவன் நினைத்தாலும் அதனைத் தடுக்க முடியாது.” என்று டிடிவி தினகரன் பேசினார்.
செல்வம்
பழனிசாமியும் பத்து பேரும் விரைவில் தண்டனை அடைவர்: டிடிவி தினகரன்