அமமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று (ஜூன் 30) சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 350 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ரகசியங்கள் லீக் ஆகிவிடும் என்பதற்காக அரங்கத்துக்குள் செல்போனுடன் யாரும் நுழையக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் மனம் திறந்து ஆலோசனை நடத்தினார் தினகரன்.
கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்ப்பதற்கான தேவையும், வாய்ப்பும் பற்றி முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பேசினார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், “அதிமுகவில் இப்போது இருக்கும் நிலையில் நாம் இரு தரப்பினரில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். ஏனென்றால் இரு தரப்பில் இருந்தும் நிர்வாகிகள் நம் கட்சிக்கு வர வாய்ப்புள்ளது” என்றார்.
அப்போது பேசிய கடம்பூர் மாணிக்க ராஜா, “அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் இனியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நம் கட்சி அமமுக, நமது சின்னம் குக்கர் என்பதுதான் இனி நம் பயணமாக இருக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பல நிர்வாகிகள் தங்கள் மாவட்ட உட்கட்சிப் பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.
நிறைவாக பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான் நம்முடைய கட்சி. குக்கர்தான் நம்முடைய சின்னம். தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் பட்டிதொட்டியெல்லாம் சுவர்களில் டிடிவியின் குக்கர் என்று இப்போதே எழுத ஆரம்பியுங்கள். நிர்வாகிகள் காலியாக இருக்கிற இடங்களில் எல்லாம் நிர்வாகிகளை நிரப்புங்கள். இப்போதைய நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவைப் பார்த்து நம் கைக்கு அதிமுக வருமா என்றெல்லாம் காத்துக் கொண்டிருக்காதீர்கள். அதிமுகவில் அந்த இருவரும் அக்கட்சியை உடைக்கும் அளவுக்குக் கொண்டு போய்விட்டார்கள். எடப்பாடி பண பலத்தை பயன்படுத்திப் பார்க்கிறார். பன்னீர் சட்டப் போராட்டம் நடத்தலாம் என்றிருக்கிறார். அதிமுக என்ன நிலைக்கு வேண்டுமானாலும் போகட்டும். அதைப் பற்றி இனி நினைக்காதீர்கள்.
குக்கர்தான் நம் சின்னம். இனி குக்கர்தான் என்றைக்கும் நமக்கு இருக்கும். அதனால்தான் மீண்டும் சொல்கிறேன். குக்கர் சின்னத்தை தமிழ்நாடு முழுதும் கொண்டு செல்லுங்கள். எல்லா ஊர்களிலும் நமது கொடிகளை ஏற்றுங்கள்.ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறேன். ஒரு வகையான ஞானத்தால்தான் சொல்கிறேன். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 இல்தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். அதற்கு முன்பே கூட சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அந்த கட்சி எப்படி இருக்கிறது, இந்த கட்சி எப்படி இருக்கிறது என்றெல்லாம் வெளியே பார்த்துக் கொண்டிருக்காமல் நம் கட்சியை பலப்படுத்துவோம்.
பாஜகவை பற்றி நான் விமர்சிப்பதே இல்லை என்று சில தலைமைக் கழக நிர்வாகிகளே இங்கு கூறினார்கள். தேவைப்பட்டால் அவர்களை விமர்சிப்போம், நல்ல விஷயங்கள் செய்தால் பாராட்டுவோம். மற்றபடி பாஜக மீது நமக்கு எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது. இப்போதைய நமது கவனமெல்லாம் குக்கர் சின்னத்தை மக்களிடம் அதிக அளவில் கொண்டு செல்ல வேண்டும். அதை முதல் வேலையாக செய்யுங்கள்” என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.