மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேனி, திருச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 24) அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டியுடன் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள பாமக, புதிய நீதி கட்சி, தமாகா, தமிழர் மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவையுடன் அமமுக முக்கிய இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு திருச்சி, தேனி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், திருச்சி தொகுதியில் அம்மாவட்ட அமமுக செயலாளராக உள்ள செந்தில்நாதனும் வேட்பாளர்களாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”அமமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள எங்கள் இருவரையும் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்று நம்புகிறேன். அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்து, 3வது முறையாக மோடியை பிரதமர் ஆக்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கும் என 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு: விவசாயிகள் வேதனை!
பியூட்டி டிப்ஸ்: வியர்வை வாடை இல்லாமல் வலம் வர…