யாருடன் கூட்டணி? : டிடிவி தினகரன் சூசகம்!

அரசியல்

2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பது பற்றி நான் அனுமானம் செய்து வைத்துள்ளேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 27) நடைபெற்றது.

அதன் பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதிமுகவால் ஒன்றும் செய்ய முடியாது

அவர் பேசுகையில், “அதிமுகவில் இரட்டை இலையும் கட்சியின் பெயரும் இருப்பதால்தான் தொண்டர்கள் அது ஜெயலலிதாவின் கட்சி என்று இருக்கிறார்கள்.

ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு வந்தாலும் இந்த இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு கட்சியை பலவீனப்படுத்தி விட்டார்கள்.

பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை உருவாக்கும் அளவுக்கு அதிமுகவில் கடந்த கால சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

குறிப்பிட்ட சிலரது நடவடிக்கைகள், அகம்பாவம், ஆணவமான பேச்சுகள், பணத்திமிரான பேச்சுகளை மக்கள் கவனித்து கொண்டு தான் வருகிறார்கள்.

பன்னீரை சந்திக்க தயார்!

இதனால் தான் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். அவ்வாறு இல்லை என்றாலும் அதுகுறித்து கவலைப்படப்போவதில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பதற்கு தயாராக உள்ளேன்” எனக் கூறினார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசுகையில், ‛‛நாட்டுக்கு 2 பலமான கட்சிகள் இருந்தால் தான் ஜனநாயகத்துக்கு நல்லது. இன்னும் 6 முதல் 7 மாதங்களுக்கு பிறகு தான் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பரபரப்பு ஏற்படும்.” என்றார்.

ஸ்டாலின் மாட்டிக்கொண்டார்

திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணியின் செயல்பாடு குறித்தும் டிடிவி தினகரன் பேசினார். ”திமுக தலைமையிலான கூட்டணி 2019நாடாளுமன்ற தேர்தல், 2021சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ஒன்றரை ஆண்டில் மக்கள் அக்கட்சி மீது நிறைய அதிருப்தியில் உள்ளனர். இன்னும் போக போக அதிருப்தி அதிகரிக்கும்.

ஏனென்றால் தேர்தல் வேளையில் திமுக முடியாதவற்றையெல்லாம் செய்வோம் என தேவையின்றி சொல்லிவிட்டனர்.

நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் மாட்டிக்கொண்டு விழித்து வருகிறார். இதுதான் உண்மை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். திமுக கூட்டணி தற்போது தமிழகத்தில் பலமிழந்து வருவதாகவே தெரிகிறது.

யாருடன் கூட்டணி!

திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு நல்ல தலைவர் அமைவது முக்கியம். இருப்பினும் கூட்டணி என்ன என்பது பற்றி அடுத்த ஆண்டு நவம்பர், டிசம்பர் என தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்ய முடியும்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பது பற்றி நான் அனுமானம் செய்து வைத்துள்ளேன். அந்த அனுமானத்தின் அடிப்படையில் கூட்டணி அமையும் பட்சத்தில் கட்சி செயல்படும்.” என்று தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

“என் ஹீரோ மெஸ்ஸி தான்” கேரளா டூ கத்தார் சென்ற பெண்!

மது வாங்க ஆதார்… திமுகவுக்கு செலக்ட்டிவ் அம்னீசியாவா?: கமல் கட்சி கேள்வி!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *