ராகுகாலம் முடிந்து பொதுக்குழுவுக்குப் புறப்படும் தினகரன்

அரசியல்

அமமுக தொடங்கப்பட்டு 5ஆவது ஆண்டு நடந்து வரும் நிலையில், இரண்டாவது முறையாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஆகஸ்ட் 15) பொதுக்குழுவைக் கூட்டுகிறார்.

அதிமுக பொதுக்குழு நடந்த வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டமும் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்கூட்டியே 300 நிர்வாகிகள் சென்னையில் குவிந்து அதற்கான வேலைகளைக் கவனித்து வந்தனர்.

மண்டபத்துக்குள் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு இரண்டாயிரம் இருக்கைகளும், வெளியில் சிறப்புப் பார்வையாளர்களுக்கு 3000 இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.

மாஸ் காட்டுவதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து தொண்டர்களையும் வரவழைத்துள்ளார் தினகரன்.

பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்திருப்பவர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி போடுவதற்கு முன்கூட்டியே 300 ஆடுகள் திருவேற்காடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.

பத்தாயிரம் பேருக்குப் பிரியாணி மற்றும் தயிர்ச் சாதம் ஆகியவை சென்னை மண்டலப் பொறுப்பாளர் கரிகாலன் மேற்பார்வையில் தயாராகி வருகிறது.

காலை 7.30 முதல் 9.00 வரை ராகுகாலம் முடிந்ததும் வீட்டிலிருந்து புறப்படும் தினகரன், மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, பொதுக்குழு நடைபெறும் வானகத்துக்குச் செல்கிறார்.

மண்டபத்தின் வெளியில் தயாராக வைக்கப்பட்டுள்ள தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, பொதுக்குழுவைத் துவங்குகிறார், பொதுக்குழுவில் 22 நிர்வாகிகளுக்கு இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் வரையில் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டிடிவி தினகரன் உரையை முடித்துவிட்டு கட்சி கொடியேற்றுவார்.

பிறகு கட்சியின் முன்னணி பிரமுகர்களைத் தினகரன் சந்திக்க இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

அதிமுகவினர் பொதுக்குழுவை முன்னிட்டு பேனர்கள், கட் அவுட்கள் வைத்திருந்ததைப் போலவே அமமுகவினரும் மண்டபத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்துள்ளனர்.

தற்போது ஸ்ரீவாரு மண்டபத்தில் அமமுகவினர் குவிந்து, தினகரன் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

-வணங்காமுடி

செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *