சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால்ய திருமணம் செய்து வைத்ததாக சமூகநல துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு சில தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த மே 4ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டியில், “சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு பால்ய திருமணம் நடத்தி வைத்ததாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அப்படி எந்த திருமணமும் நடைபெறவில்லை. அதோடு ஆறாம், ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கட்டாய கன்னித்தன்மை சோதனையான இருவிரல் சோதனையை நடத்தியிருக்கின்றனர்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், குழந்தை திருமண விவகாரத்தில் என்ன நடந்தது? கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை செய்தார்களா? என புலன் விசாரணையில் மின்னம்பலம் இறங்கியது
அடுத்தடுத்த புகார்கள்!
முதலில் சமூக நல அலுவலர்கள் சிலரிடம் விசாரித்தோம்…
முதல் புகார்!
“கடலூர் மாவட்ட சமூகநல அலுவலர் சித்ராவுக்கு குழந்தை திருமணம் பற்றி ரகசியத் தகவல்கள் கிடைத்தன. அதைப்பற்றி அவர் விசாரித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 2022 ஜூன் மாதம் 20ஆம் தேதி ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ‘சிதம்பரம் எம்.எஸ் திருமணம் மண்டபத்தில் மேனா மேனா பாடசாலையில் 2021 ஜூன் 3ஆம் தேதி மாரியம்மாள் என்ற 17 வயது சிறுமிக்கும், மாரியப்பன் என்ற 17 வயது சிறுவனுக்கும் திருமணம் நடந்தது’ என்று தெரிவித்திருந்தார். அந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.(கு.எண் 506/2022). பாதிக்கப்பட்ட சிறுமியிடம் 2022 நவம்பர் 15ஆம் தேதி சிதம்பரம் நீதிமன்றத்தில் ‘164 வாக்குமூலம்’ பெறப்பட்டது.
இரண்டாவது புகார்!

மாவட்ட சமூகநல அலுவலர் சித்ரா கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022 செப்டம்பர் 21ஆம் தேதி இரண்டாவது புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘2021 பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி சிவகாமி அம்மன் சன்னதியில் கண்ணாமாள் என்ற 15 வயது சிறுமிக்கும் கண்ணப்பன் என்ற 19 வயது இளைஞருக்கும் குழந்தை திருமணம் நடந்தது’ என தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (குற்ற எண் 16/2022). பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2022 செப்டம்பர் 29ஆம் தேதி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் ‘164 வாக்குமூலம்’ பெறப்பட்டது.
மூன்றாவது புகார்!

சமூகநல அலுவலர் சித்ரா, மற்றொரு புகாரை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022 அக்டோபர் 4ஆம் தேதி அளித்தார். 2021 ஜனவரி 25ஆம் தேதி பாக்கியலட்சுமி என்ற 13 வயது சிறுமிக்கும் பாக்கியநாதன் என்ற 19 வயது இளைஞருக்கும் குழந்தை திருமணம் நடந்தது என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (குற்ற எண் 17/2022). பாதிக்கப்பட்ட சிறுமியிடம் 2022 நவம்பர் 18ஆம் தேதி சிதம்பரம் நீதிமன்றம் 2இல் ‘164 வாக்குமூலம்’ பெறப்பட்டது.
நான்காவது புகார்!
பரங்கிப்பேட்டை ஒன்றிய சமூகநல அலுவலர் மீனா சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022 அக்டோபர் 15ஆம் தேதி ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ‘2021 ஜனவரி 25ஆம் தேதி சிதம்பரம் கீழ் வீதியில் கோதண்டராமன் திருமண மண்டபத்தில் ராசாத்தி என்ற 17 வயது சிறுமிக்கும் ராஜேந்திரன் என்ற 17 வயது சிறுவனுக்கும் குழந்தை திருமணம் நடந்தது’ என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (குற்ற எண் 15/ 2022).
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் 2022டிசம்பர் 22ஆம் தேதி சிதம்பரம் நீதிமன்றம் 2இல் ’164 வாக்குமூலம்’ பெறப்பட்டது” என்றனர் சமூக நல அலுவலர்கள்.

என்ன சோதனை செய்தார்கள்?
இதையடுத்து குழந்தை திருமண வழக்குகளின் விசாரணை அதிகாரிகளான காவல்துறை பெண் ஆய்வாளர்களிடம் விசாரித்தோம்.
இரட்டை விரல் பரிசோதனை குறித்து அவர்கள் கூறுகையில், “பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணாம்மாளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது சிறுவர் சிறுமிகள் ரன்னிங், ஜம்ப்பிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இதனால் கன்னித்திரை சிறு வயதிலேயே கூட கிழிந்திருக்கலாம். அதனால் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. பிறப்புறுப்பு பகுதியில் விந்தணுக்கள் உள்ளதா?, கிருமிகள் உள்ளதா? அல்லது காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதற்காக இந்த டெஸ்ட் செய்யப்படும்.
குறிப்பாக இந்த டெஸ்ட் சிறுமி கண்ணம்மாவுக்கு எடுக்கப்பட காரணம், அவர் கழுத்தில் தாலி, காலில் மெட்டி அணிந்தவாறு பால் சொம்புடன் முதலிரவுக்கு செல்லும் புகைப்படம் ஒன்று எங்களுக்கு கிடைத்தது. அதனால் ஏதாவது தவறு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் டெஸ்ட் எடுத்தோம். அந்த டெஸ்ட்டில் சந்தேகப்படும்படி ஏதும் இல்லை. சிறுமியின் வாக்குமூலத்தை வீடியோவாகவும் ஆடியோவாகவும் பதிவு செய்தோம்” என்றனர் காவல்துறை துறை அதிகாரிகள்.

சிறுமியின் வாக்குமூலம்
அவர்களிடம் சிறுமி உங்களது கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்தாரா? விசாரணையில் என்ன சொன்னார்? என்று நாம் கேட்டோம்.
இதற்கு பதிலளித்த அவர்கள், “பாவம் பிள்ளை… அழுதுகொண்டே இருந்தாள். விசாரணைக்கு அழைத்து வரும்போதே காலில் மெட்டி கழுத்தில் தாலியுடன் வந்தாள். அவளிடம் உனக்குக் கல்யாணம் நடந்ததா என்று கேட்டோம். ‘இல்லை’ என தலை ஆட்டினாள்.
ஏம்மா கழுத்தில் தாலி இருக்கு, கால்ல மெட்டி போட்டிருக்க, ஆனா கல்யாணம் ஆகலனு சொல்ற என்று கேட்ட போதுதான், ‘கல்யாணம் நடந்துச்சுனு’ ஒப்புக்கொண்டாள்.

கையில் பால் சொம்புடன் இருக்கிற போட்டோவை காண்பித்து, இது என்ன காட்சி போட்டோ, கையில் எதற்கு பால் சொம்பு என்று கேட்டோம்.
அதற்கு அவள், ‘பொறந்த ஆத்துல இருந்து புக்காத்துக்கு போனதும் முதலிரவுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த போட்டோதான்’ என்றாள். அதோடு, அவாளுக்கு திருமணம் நடந்தது, இவாளுக்கு திருமணம் நடந்தது என 14 பேர் கொண்ட ஒரு லிஸ்ட்டையே சொன்னாள். அவள் சொல்வதை கேட்டு விசாரணை அதிகாரிகளான நாங்களே பதறிப்பொய்விட்டோம்” என்றனர் காவல்துறை அதிகாரிகள்.
அவள் சொன்னதன் அடிப்படையில் நேரில் சென்று விசாரித்தோம். போலீசார் விசாரணைக்கு வருகிறார்கள் என தகவல் தெரிந்ததுமே, கல்யாணம் ஆன பிள்ளைகளின் கழுத்திலிருந்த தாலிகளை அவசரம் அவசரமாகக் குடும்பத்தினர் கழட்டி மறைத்து வைத்துவிட்டனர். ஆனால் குழந்தை திருமணம் நடந்த போட்டோ, வீடியோக்கள் எல்லாம் கிடைத்தது. அதை வைத்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தோம்” என்றனர்.
தீட்சிதர்களுக்கு பயம்!
மேலும் அவர்கள் பேசுகையில், “எதற்காக இரட்டை விரல் பரிசோதனை செய்தார்கள் என்று சொல்கிறார்கள் என தெரியவில்லை. அப்படி ஒரு சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஸ்வாப் டெஸ்ட்தான் சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்டது.
காதுகுடையும் பட்ஸ் போல் இருக்கும் ஒரு ஸ்டிக்கின் முனையில் பஞ்சை வைத்து தொடை இடுக்கிலும், பெண் உறுப்பிலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்யப்படும். அவ்வளவுதான்.
இந்த விஷயத்தை பூதாகரமாக்க காரணம், போக்சோ சட்டம் பாய்ந்துவிடுமோ என தீட்சிதர்களுக்கு வந்த பயம்தான் ” என்றனர்.

அடுத்ததாக தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான சந்திரசேகரிடம் சிதம்பரம் மேற்கு சன்னதியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினோம்.
அப்போது அவர், “இரு விரல் பரிசோதனை செய்தார்கள் என்று ஆளுநரே பொதுவெளியில் சொல்லியிருக்கிறார்” என்றார்.
“டிஜிபி இல்லை என்று மறுத்துள்ளாரே” என்று கேள்வி எழுப்பினோம்.
“மறுத்தால் இல்லை என்றாகிவிடுமா” என மறுகேள்வி எழுப்பினார்.
“குழந்தை திருமணம் நடந்தது உண்மையா இல்லையா” என கேட்டோம். “இல்லை, அது அப்பட்டமான பொய்” என்று பதிலளித்தார்.
காவல்துறையினர் குழந்தை திருமணம் நடந்த போட்டோ வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக சொல்கிறார்களே?” என்று கேட்டதும், “பொய் சொல்கிறார்கள். அப்படி ஏதும் இல்லை. இருந்தால் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கலாமே” என்றார்.
இருவிரல் பரிசோதனை செய்யவில்லை என்றும் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, “பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்கள். அதை வைத்து 24.10.2022லேயே தேசிய குழந்தைகள் நல ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நேர்மையாக விசாரிக்கமாட்டார்கள். தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்” என கூறினார்.
ஆனால், “உண்மையில்லாமல் எதுவும் வெளியே வராது. குழந்தை திருமணம் நடந்தது உண்மை தான்” என தீட்சிதரான தர்ஷன் தெரிவித்தார்.
ரகசிய பால்ய திருமணங்கள்

அடுத்ததாக சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் மீட்பு குழு தலைவர் கோவி மணிவண்ணன் நம்மிடம் கூறுகையில், “காலம் காலமாக குழந்தை திருமணம் நடந்து வருகிறது. இதை ரகசியமாக செய்வார்கள். கடந்த ஆண்டு தீட்சிதர் ஒருவரது குடும்பத்தில் நடந்த குழந்தை திருமணம் குறித்து நான் சிதம்பரம் நகர காவல் நிலையத்திலும், சமூக நலத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தேன்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போது குழந்தை திருமணம் நடந்ததை ஒப்புக்கொண்டார்கள். அந்த குடும்பத்தின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
ஒரு சிலர் விவாக பத்திரிகை அடிப்பார்கள். ஆனால் காவல்துறை, சமூக நலத்துறைக்கு பயந்து வேறு ஒரு இடத்தில் திருமணத்தை நடத்துவார்கள். இன்றளவும் குழந்தை திருமணம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
தீட்சிதர்கள் மீது பொய் பரப்புகிறார்கள் என்று சொல்வது முழுக்க முழுக்க பொய். நடராஜர் கோயிலில் 417 தீட்சிதர்கள் பூஜை செய்கிறார்கள். அவர்கள் உறவினர்களுக்குள் குழந்தை திருமணத்தை நடத்திக் கொள்வார்கள். பூஜை முறைக்காக திருமணம் செய்து வைப்பார்கள்” என்றார்.

இருவிரல் பரிசோதனை குற்றச்சாட்டு தொடர்பாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைஅதிகாரிகளிடம் விசாரித்தோம்.
“மருத்துவத் துறை நெறிமுறைகள்படி, இருவிரல் பரிசோதனைகளை செய்வதில்லை. சிதம்பரம் தீட்சிதர் மகள் ஒருவருக்கு ஸ்வாப் டெஸ்தான் செய்யப்பட்டது. இதை மருத்துவக்குறிப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம். இதில் எந்தவிதமாக குழப்பங்களும் வேண்டாம்” என்றனர்.
நீதிமன்றத்தை நாடிய தீட்சிதர்கள்

குழந்தை திருமண விவகாரத்தில் மணமகன், மணமகள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால், 52 தீட்சிதர்கள் தங்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். (CRLOP 25700/2022). ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 52 பேரின் முன் ஜாமீன் மனுவும், 2022 நவம்பர் 2ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் பால்ய திருமணமே நடைபெறவில்லை என்று சொல்வது முழுக்க முழுக்க தவறான கூற்று. இருவிரல் டெஸ்ட் நடந்தது என்று சொன்னதும் தவறானது.
(சிறுமிகள் சிறுவர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது)
வணங்காமுடி
10 நாளில் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் 2
’ஆளுநர் கருத்தை அரசும், முதல்வரும் பெரிதுபடுத்துவதே இல்லை’: எ.வ.வேலு
Comments are closed.