டிரம்பின் வெற்றி… உலகமயத்தின் தோல்வி!

Published On:

| By Minnambalam

Trumps victory is the defeat of globalization

அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று பதவி ஏற்றது முதல் உலகில் பரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமில்லை. அவை அனைத்தும் டிரம்ப் என்ற ஒற்றை மனிதரின் செயல்பாடுகளினால்தான் எல்லாம் நடப்பதான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. இப்படி வரலாற்றைத் தனிமனிதர்களை மையப்படுத்தி பார்ப்பதும் எழுதுவதும் புதிதல்ல; அந்தச் செல்வந்தர்கள் வீசி எறியும் எலும்புத் துண்டைக் கவ்விக்கொண்டு இந்த இலகுடபாண்டிகள் எப்போதும் இப்படித்தான் எழுதி வருகிறார்கள்.

ஆகவே, இந்தத் தனிமனித துதிப்பாடல்களை வீசி எறிந்துவிட்டு “வரலாற்றில் தீர்மானகரமானது உற்பத்தியும் மறுவுற்பத்தியும்தான்” என்ற ஏங்கல்ஸின் வரிகளைப் பற்றி இந்தப் பரபரப்பையும் உலக மாற்றத்தையும் புரிந்துகொள்ள முயல்வோம். இந்த நாகரிக காலத்தில் சொந்த தேவைக்கு அல்லாமல் சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் அதற்கான மூலப்பொருள்கள், அவற்றை சந்தைக்கு எடுத்துச் செல்ல தேவையான சரக்குப் போக்குவரத்து, கொடுத்து வாங்க தேவையான பணப்பரிவர்த்தனைதான் உற்பத்தியின் அடிப்படை உட்கூறுகள்.

இந்தக் கூறுகள் பானை, முறம் எனத் தொடங்கி இன்று திறன்பேசி, கணினி எனப் பல்வேறு சரக்குகளாகவும், கட்டை வண்டியில் தொடங்கி சரக்குக் கப்பல், ரயில், விமானம் என மேம்பட்ட வேகமான சரக்கு போக்குவரத்தாகவும், பண்டத்தைக் கொடுத்து பண்டம் பெறுவதில் தொடங்கி கிளிஞ்சல், மாடு, தானியங்கள், செம்பு, தங்கம் என வளர்ந்து இன்று இணையதளத்தில் மின்னணு நாணயத்தில் பரிவர்த்தனை செய்வதாகவும் வளர்ந்து நிற்கிறது. மனித வரலாற்றில் உற்பத்தியில் ஏற்படும் இந்த மாற்றங்கள்தான் மனிதர்களைப் பண்படாத அநாகரிக நிலையில் இருந்து மேம்பட்ட நாகரிக சமூகமாக மாற்றி இருக்கிறது.

வரலாற்றில் மனிதர்களை இப்படி நாகரிக சமூகமாக மாற்றியதில் இரும்பின் கண்டுபிடிப்பு முதன்மையானது. அது விவசாய உற்பத்தியில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. இவன் இந்தக் குலம், அவன் அந்த இனம் என்று வாழ்ந்தவர்களை இவன் இந்தப் பொருளைச் செய்பவன், அவன் அந்தப் பொருளைச் செய்பவன் என அவர்களுக்குள் உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது. இவர்களுக்குள் பணத்தின் வழியாகப் பொருளைக் கொடுத்து பொருளைப் பெற்ற பரிவர்த்தனையின் போக்கில் இந்தப் பொருள் செல்வத்தை வைத்திருப்பவர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி சண்டையிட வைத்தது. இறுதியில் இருப்பவன், இல்லாதவன் என்ற இரு பிரிவுகளைக் கொண்ட ஒரே தேசிய இனம் ஒரே நாட்டு மக்கள் என உருவாகக் காரணமானது. Trumps victory is the defeat of globalization

அனடோலியா என்று சொல்லப்பட்ட இன்றைய இஸ்தான்புல் நகரப் பகுதியில் அதிக அளவில் உற்பத்தியான இரும்பு அதற்கு அருகில் வாழ்ந்த கிரேக்கர்களை அதனைக் கொண்டு ஆயுதங்கள் செய்து அலெக்ஸாண்டர் தலைமையில் உலகெங்கும் இருக்கும் விவசாய உற்பத்திக்கான நிலத்தைக் கைப்பற்ற வைத்தது. துருப்பிடிக்காத இரும்பை அதிகளவில் உற்பத்தி செய்யும் நுட்பத்தையும் அதனைக் கொண்டு செய்த இயந்திரங்களை நீராவி கொண்டு இயக்க வைக்கும் நுட்பத்தையும் ஆங்கிலேயர்கள் கண்டறிந்தது சரக்கு உற்பத்தியிலும், சரக்குக் கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்திலும் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வந்தது. Trumps victory is the defeat of globalization

இப்படி உற்பத்தியான சரக்கை விற்க உலக நிலப்பிரபுத்துவ தேசியங்களின் எல்லைகளை உடைத்து அந்தச் சந்தைகளைக் கைப்பற்றியதில் கண்ட வெற்றி இங்கிலாந்தை உலகை ஆளும் ஏகாதிபத்தியமாக மாற்றியது. இந்தப் பரிவர்த்தனைக்கான அவர்களின் நாணயம் உலகப் பணமாகவும் இதனைக் கண்காணித்து கட்டுப்படுத்திய லண்டன் உலக நிதிய மையமாகவும் உருவெடுத்தது. இப்படி விவசாய, தொழிற்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட இரும்பு அதன் உற்பத்தியைக் கைப்பற்றியவர்களை அந்த உற்பத்தியின் அடிப்படையிலான உலகை ஆள வைத்தது.

இங்கிலாந்தின் உலக விரிவாக்கம் அதன் இரும்பு உற்பத்தி மற்றும் போக்குவரத்து சரக்குகளின் விரிவாக்கம். அவர்களின் உலகப் பரவல் அந்த தொழில்நுட்ப உற்பத்தியின் பரவல். அந்தப் பரவல் அந்நுட்பங்களில் அவர்களின் ஏகபோகத்தை உடைத்தது. போட்டியாளர்களையும் சந்தையைக் கைப்பற்ற அவர்களுக்குள் சண்டையையும் உருவாக்கியது. உலகம் இரண்டு பெரும் போர்களைக் கண்டது. இங்கிலாந்து ஏகாதிபத்தியம் உடைந்து தேசியங்கள் விடுதலை பெற்றன.

இதனிடையில் நீராவியின் இடத்தை மின்சாரமும் எண்ணெயும் பிடித்தன. சிக்கலான பெரிய கப்பல், ரயில் போக்குவரத்துடன் விமான போக்குவரத்தும் அளவில் சிறிய பேருந்து, மகிழுந்து போன்றவற்றின் போக்குவரத்தும் வளர்ந்தது. போக்குவரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றமும் இவற்றை உற்பத்தி செய்யும் நுட்பங்களையும் இயக்குவதற்கான எண்ணெயையும் ஒருங்கே பெற்ற அமெரிக்கா உலக உற்பத்தி மையமாக உருவெடுத்தது.

இதே சரக்குகளுக்கான மூலப்பொருள்கள், உற்பத்தி நுட்பங்கள், எண்ணெய் வளம் கொண்ட சோவியத் எதிர்துருவமானது. அமெரிக்க துருவம் முற்றுமுழுதாக தனியார் மூலதனத்தின் கீழும் (சரக்கு உற்பத்தி, போக்குவரத்து, பரிவர்த்தனை என அனைத்தும்) சோவியத் துருவம் சமூக மயமாக்கப்பட்ட மூலதனத்தின் கீழும் இயங்கியது. இருவேறு கட்டமைப்புகளைக் கொண்ட துருவங்கள் சந்தை விரிவாக்கத்துக்கு சண்டையிட்டன.

எண்ணெயில் இயங்கும் வண்டிகளுக்கான தொழில்நுட்பங்களுடன் மேம்பட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் பணப்பரிவர்த்தனைக்கான இணைய தகவல் தொழில்நுட்பங்களையும் அவற்றுக்கான கணினி உள்ளிட்ட பொருள்களையும் கண்டறிந்து திறன்மிக்க வகையில் மூலதனத்தை நிர்வகித்து உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்ற அமெரிக்கா சோவியத்தை வென்றது. சோவியத் நாடுகளை உலகமயத்தை ஏற்க வைத்து அதன் சந்தைகளைக் கைப்பற்றியது.

சமூக மயமாக்கப்பட்ட மூலதனத்தில் இயங்கிய அந்த நாடுகளை தனியார் மூலதனத்தில் இயங்கும் வகையில் மாற்றி அமைக்க வைத்தது. தனது விமானங்கள், வண்டிகள் அவற்றை இயக்கும் எரிபொருள், பரிவர்த்தனைக்கான தகவல் தொழில்நுட்ப சாதனங்களைச் சந்தைப்படுத்த உலக முதலாளித்துவ தேசிய எல்லைகளை உடைத்தது. உலக நாடுகள் நவகாலனிகள் ஆயின. இந்தச் சரக்குகளின் மதிப்பைத் தெரிவித்த அவர்களின் டாலர் உலகப்பணம் ஆனது. நியூயார்க் முக்கிய உலக நிதிய மையமாக மாறியது.

“இரும்பினால் உற்பத்தியாகி எண்ணெயில் இயங்கி தகவல் தொழில்நுட்பப் பொருள்கள் வழியாகப் பணப்பரிவர்த்தனையை நிர்வகிக்கும்” இந்த உலக உற்பத்தியை ஆளும் ஏகாதிபத்தியமானது அமெரிக்கா. எனவே உலகமயத்தின் வெற்றி உலக சரக்கு உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான எரிபொருளின் மதிப்பைத் தீர்மானித்து அதன் பரிவர்த்தனைக்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததில் இருந்தது.

சுரங்கங்கள் தோண்டி நிலக்கரியையும், கனிமங்களையும் எண்ணெயையும் எடுத்து சரக்குகளை உற்பத்தி செய்து அதன் வழியான போக்குவரத்து பணப்பரிவர்த்தனை செய்து கொண்ட மனிதர்களின் இந்தச் செயல்பாடுகள் இயற்கையுடனான முரணைக் கொண்டுவந்து இருக்கிறது. பெருமளவில் வெளியேறும் பசுமைக்குடில் வாயுக்கள் உலக வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தி வருகிறது.

இதனோடு ஏகாதிபத்தியம் எரிபொருள் விலையைச் செயற்கையாக ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்கி டாலரின் மதிப்பைத் திரித்து உலக நாடுகளின் நாணய மதிப்பைச் சரித்து வந்தது. அதன் வழியாக உலகத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களைக் கடன்காரர்களாக மாற்றியது.

அதனால் இந்த எரிபொருள் மைய பொருளாதார சுழற்சி கடுமையான சுருக்கத்தைக் கண்டது. இது ஏகாதிபத்தியத்துக்கும் பாட்டாளிகளுக்குமான முரணை கூர்மையடைய வைத்திருக்கிறது. இந்தப் பொருளாதாரச் சுருக்கம் இதுவரையிலும் சுரண்டலில் பங்கெடுத்து பலனடைந்து வந்த உலக நாடுகளின் தேசிய முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்குமான முரணையும் வலுப்படுத்தியது.

“இயற்கையுடனான மனித சமூகத்தின் முரணை உற்பத்தி சக்திகளின் (Development of productive forces) வளர்ச்சியைக் கொண்டு தீர்க்க வேண்டும்” என்கிறார் மாவோ. அந்த வழியில் மனித சமூகம் நிலக்கரி, எண்ணெய்க்குப் பதிலாக சூரியன், காற்று, நீர் வழியான மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அந்த ஆற்றலை மின்கலங்களில் சேமித்து அதன் வழியான போக்குவரத்தை நடத்தவுமான புதிய உற்பத்தி சக்திகளைக் கண்டறிந்தும் இருக்கிறது.

எழுபதுகளின்போது மொத்த இந்திய முதலாளித்துவ சமூகத்துக்கான மூலதனமாக மாற்றப்பட்டு அவர்களின் பிரதிநிதியான ஒன்றிய அரசினால் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்தி வந்த இந்தியா உலகமய அறிமுகத்துக்குப்பின் படிப்படியாக அதனை ஒரு சிலருக்கான தனியார் மூலதனமாக்கி அதன் மதிப்பைத் தீர்மானிக்கும் ஆற்றலை இழந்து வந்தது. இந்தப் பாதை இயல்பாக இந்தியாவை அமெரிக்காவின் நவகாலனியாக்கியது.

சோவியத்துடனான முரணில் பகுதியளவு ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஏற்ற சீனா இதே காலத்தில் மக்களுக்கு கல்வி அளித்து உழைப்புப் பிரிவினையை ஊக்குவித்து அந்த மூலதனத்தை எல்லா புதிய பழைய முதலாளிகளுக்குமானதாக ஜனநாயகப்படுத்தியது. அதன்மூலம் பழைய கப்பல், ரயில் போக்குவரத்து மற்றும் புதிய பணப்பரிவர்த்தனைக்கான இணைய தொழில்நுட்பங்களை அடைந்ததோடு அவற்றில் புதுமைகள் செய்தும் புதிய உற்பத்தி நுட்பங்களான சூரிய, காற்று மின்சார உற்பத்தி மற்றும் சேமக்கலங்களின் உற்பத்தியையும் அதன் வழியிலான போக்குவரத்தையும் அடைந்து இருக்கிறது.

உலகமய எரிபொருள் – இணையவழி உற்பத்தியை அனுமதித்து முழுமையான தனியார்மயத்தையும் தாராளவாத அரசியலையும் தவிர்த்த சீனா உற்பத்தி நுட்பங்களை அடைந்து போட்டியாளன் ஆகி இருக்கிறது. கூடுதலாக இணைய தகவல் தொழில்நுட்பத்தைப் கண்டறிந்த அமெரிக்கர்கள் அதனைப் பணப்பரிவர்த்தனைக்கான சேவைத்துறைக்கு பயன்படுத்தினார்கள். அவர்களின் வங்கிகள் அனைத்து உலக சரக்கு உற்பத்தி, சரக்கு போக்குவரத்து, பணப்பரிவார்த்தனையிலும் அங்கம் வகித்து லாபத்தை அறுவடை செய்தன.

அந்த இணைய தொழில்நுட்பத்தை அடைந்த சீனர்களோ அதனை உற்பத்தி பெருக்கத்துக்கும் பயன்படுத்தி அதைச் சரக்கு உற்பத்திக்குமானதாக மாற்றி இருக்கிறார்கள். உலகிலேயே அதிகமான தொழிற்துறை தானியங்கி இயந்திரங்களைப் (Industrial robots) பயன்படுத்துவதோடு அவற்றை அதிவேக 5ஜி இணையத்துடன் இணைத்து குறைந்த செலவிலும் நேரத்திலும் அதிக தரமான பொருள்களைச் சீனர்கள் உற்பத்தி செய்கிறார்கள். மலிவான விலையில் சூரிய மின்னாற்றல் தகடுகள், இணைய சாதனங்கள், மின்மகிழுந்துகள், திறன்பேசிகளைச் சந்தைப்படுத்தி அதிக விலையில் பொருளை விற்று பெரு லாபம் ஈட்டும் ஏகாதிபத்திய நிறுவனங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள்.

எண்ணெய்க்கு பதிலான மாற்று எரிபொருளும், இணையத்தைப் பணப்பரிவர்த்தனைக்கு மட்டுமல்லாமல் சரக்கு உற்பத்திக்குமானதாக மாற்றியது புதிய உற்பத்தி சக்திகளாக (New productive forces) உருவாகி இருக்கிறது. இது பழைய எரிபொருள் – இணைய உற்பத்தியின் அடிப்படையில் எழுந்த ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. பழைய உற்பத்தி கருவிகளான எரிபொருள், இணையத்துடனான அதன் உறவை (Relations of production) உடைத்து பலகீனமாக்கி இருக்கிறது. இருவேறு உற்பத்தி சக்திகளுக்கு இடையிலான முரணை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரக்கு உற்பத்தி, எரிபொருள், போக்குவரத்து, பணப்பரிவர்த்தனை முழுக்க முழுக்க தனியார் மூலதனத்தின் கீழ் நடைபெறுவது. சீன முதலாளிகளின் சரக்கு உற்பத்தி அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் எரிபொருள், போக்குவரத்து, இணையத்தைக் கொண்டு சமூகமயமாக்கப்பட்ட மூலதனத்தின்கீழ் செயல்படுவது. அதாவது சோசலிச அடித்தளத்தில் நடைபெறும் முதலாளித்துவ உற்பத்தி.

ஏகாதிபத்தியத்தில் சரக்கின் விலையை முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். இங்கே அரசு தீர்மானிக்கிறது. ஆகவே, இரண்டு உற்பத்தி சக்திகளுடன் கொண்டிருக்கும் உற்பத்தி உறவுகள் வேறுபட்டது. எனவே, இருவேறு உற்பத்தி சக்திகளுக்கு இடையிலான முரண் முதன்மையானது; இந்த உற்பத்திகளில் தொடர்புடைய தனியார் நிதி மூலதனத்துக்கும் சமூகமயமாக்கப்பட்ட மூலதனத்துக்கும் இடையிலான முரண் துணைமுரண். இதில் ஈடுபடும் ஏகாதிபத்திய சமூக கட்டுமானமும் சோசலிச சமூகக் கட்டுமானமும் இம்முரண்களின் இரு கூறுகள்.

இந்த உற்பத்தி முரணைத் தீர்க்க புதிய உற்பத்தி சக்தியை வளர்த்தெடுக்கும் சீனாவையும் அவர்களுடன் இணைந்து கொண்டு பழைய எரிபொருள் மைய உற்பத்தியை உடைக்கும் ரஷ்யாவையும் குறிவைத்தது அமெரிக்கா. அது சீனப் பங்குச்சந்தை மீதான நிதியத் தாக்குதல், ஹாங்காங், தைவான் உள்நாட்டு குழப்பம், வர்த்தகப்போர், தொழில்நுட்ப ஏற்றுமதி தடை, கொரோனாவைப் பயன்படுத்தி சீனாவைத் தனிமைப்படுத்துதல் என்பதாக அது வெளிப்பட்டது.

பழைய எரிபொருள் மைய டாலர் பணப்பரிவர்த்தனையைக் காக்க சீனாவிற்கு செல்லும் கடல் சரக்குப் போக்குவரத்து முற்றுகையாகவும், மேற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் வண்ணப்புரட்சிகளாகவும், பதிலிப் போர்களாகவும் அது வெடித்தது.

இதனை அறிவியல் முன்னேற்றத்தின் வழியாகவும் புதிய போக்குவரத்து பாதைகள், அரசியல் கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகவும் சீனா தடைகளை உடைத்து தற்சார்பை எட்டியது. பதிலிப் போர்களில் ரசியா நேரடியாக இறங்கி தோற்கடித்து டாலர் அல்லாத பணப்பரிவர்த்தனையை நடைமுறையாக்கி இழந்த தனது இறையாண்மையை மீட்டது. மற்றவர்களையும் அந்தப் பாதையை நோக்கி நகர்த்துகிறது.

இந்தப் புதிய உற்பத்தி சக்திகளின் வெற்றியும் எரிபொருள் மைய டாலர் பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்டு இருக்கும் உடைப்பும் இதைத் தடுத்து நிறுத்துவதில் ஏகாதிபத்தியம் கண்ட தோல்வியும் இதுவரையிலும் தொழிற்துறை எண்ணெய் மூலதனமும் வங்கி மூலதனமும் இணைந்த அமெரிக்க நிதி மூலதனத்தில் உடைப்பை ஏற்படுத்தி உள்முரணை ஏற்படுத்தியது.

இந்தத் தோல்விகளைத் தொடர்ந்து ஒரு தரப்பு உக்ரைன் உள்ளிட்ட போர்களை விடாமல் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்தி ஆதிக்கத்தைத் தக்கவைக்க முற்பட்டது. தற்காலிகமாக புதிய உற்பத்தி சக்திகளை ஏற்று சீனாவுடன் பேசி தனக்கு சாதகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு தன்னுடைய இழப்பைத் தவிர்க்க முனைந்தது.

மற்றொரு தரப்பு தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கி வலிமையைக் கூட்டிக்கொண்டு பின்னர் சண்டையிட்டு ஆதிக்கத்தை நிலைநிறுத்த எண்ணியது. அது தற்காலிகமாக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து பழைய எரிபொருள் மைய கட்டமைப்பைத் தொடரச் செய்து தன்னுடைய இழப்பைக் குறைத்துக் கொள்ள முற்பட்டது.

முதல் தரப்பின் பிரதிநிதியாக ஜனநாயகக் கட்சியும் இரண்டாம் தரப்பின் பிரதிநிதியாக குடியரசுக் கட்சியும் செயல்பட்டன. குடியரசுக் கட்சியின் வெற்றியைத் தடுக்க டிரம்பைக் கொலை செய்ய முற்படும் அளவுக்கு முதல்தரப்பு சென்றது. இதில் மின்மகிழுந்துகளை உற்பத்தி செய்து உலகப் பணக்காரரான மஸ்க் ஜனநாயகக் கட்சியில் இருந்து குடியரசுக் கட்சிக்கு தாவியது அமெரிக்கத் தேர்தலில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

டிரம்ப் வெற்றி பெற்று காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அமெரிக்காவின் ஐந்து பெரிய வங்கிகளும் காலநிலை மாற்ற முதலீட்டு கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கின்றன. எண்ணெய் அகழ்ந்தெடுப்பு தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் டிரம்ப் நீக்கி இருக்கிறார். இது எண்ணெய் மைய டாலர் பணப்பரிவர்த்தனை உற்பத்திக் கட்டமைப்பைத் தொடர அமெரிக்கா முடிவெடுத்து விட்டதைக் காட்டுகிறது.

அதேசமயம் உலக எரிபொருள் – இணைய உற்பத்தி உடைந்து அதன் அடிப்படையிலான உலகமயம் தோல்வி அடைந்துவிட்டதையும் அதன் அடிப்படையிலான ஒற்றைத்துருவ ஒழுங்கு உடைந்துவிட்டதையும் உறுதிப்படுத்துகிறது. அதன் ஒரு வெளிப்பாடே டிரம்ப்பின் வெற்றி.

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share