அமெரிக்க அதிபர் தேர்தலில் 279 எலக்டோரல் வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் இன்று (நவம்பர் 6) வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து டிரம்புக்கு இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது முந்தைய பதவிக்காலத்தின் சிறப்புகளை நீங்கள் மீண்டும் செயல்படுத்தும்போது, இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன். நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு
வரலாற்று சிறப்புமிக்க வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை நீங்கள் மீண்டும் கைப்பற்றியிருக்கிறீர்கள்.
இது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சக்திவாய்ந்த நல்லுறவிற்கு ஒரு வலிமையான நம்பிக்கையாக இருக்கும்.
பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மர்
உங்களுடன் இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன். நெருக்கமான நட்பு நாடுகள் என்ற முறையில், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக செயல்படுவோம்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
டிரம்ப் தலைமையின் கீழ் ஒரு வலுவான அமெரிக்காவை எதிர்பார்க்கிறேன். இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து வாழ்த்தவும், அமெரிக்காவுடனான உக்ரைனின் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஸ்
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியர்களும் அமெரிக்கர்களும் சிறந்த நண்பர்கள் மற்றும் உண்மையான கூட்டாளிகள். இதேபோல எதிர்காலத்திலும் நாம் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன்
அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் துருக்கி -அமெரிக்க உறவுகள் வலுப்பெறும். குறிப்பாக, பிராந்திய மற்றும் உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் போர்கள், குறிப்பாக பாலஸ்தீனிய பிரச்சினை மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இயக்குநர் சுசீந்திரனின் ‘2கே லவ் ஸ்டோரி’ : டீசர் நாளை வெளியீடு !
டிரம்ப் வெற்றி… எலான் மஸ்க்கிற்கு காத்திருக்கும் பரிசு!