அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் பங்கேற்ற ஆன்லைன் விவாதம் டிடாஸ் அட்டாக்கால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
வருகிற நவம்பர் 5-ஆம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது. குடியரசு கட்சி சார்பாக டொனாள்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பாகக் கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க நேரப் படி ஆகஸ்ட் 12, இரவு 8 மணிக்கு டிரம்ப், தனது எக்ஸ் தளத்தின் ஸ்பேஸ் (Space) மூலம் மக்களிடம் உரையாடத் திட்டமிட்டிருந்தார். இந்த ஆன்லைன் உரையாடலை, டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கும் சேர்ந்து நடத்துவதாக இருந்தது.
ஆனால் குறித்த நேரத்தில், இந்த ஆன்லைன் உரையாடலை டிரம்பால் தொடங்க முடியவில்லை.
இதைப் பற்றி தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் “எக்ஸ் தளத்தின் மீது டிடாஸ்(DDOS) தாக்குதல் நடத்தப் படுவதாகத் தெரிகிறது. அதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். தடுக்க முடியவில்லை என்றால், குறைந்த அளவிலான பார்வையாளர்களுடன் புதிதாக உரையாடலை நடத்துவேன். அதுபற்றி பின்னர் பதிவிடுகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
அளவுக்கு அதிகமான நபர்கள் இந்த உரையாடலில் இணைய முயன்றதால் கூட இம்மாதிரி பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது என்று எகஸ் தளத்தில் சிலர் பதிவிட்டிருந்தார்கள்.
ஆரம்பத்தில் இந்த பிரச்சினையால் சில நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது ஸ்பேஸ் உரையாடல். இது சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இதில் டிரம்ப் ,தன்னை கொல்ல நடந்த முயற்சி, சட்டவிரோதமாக நடக்கும் குடியேற்றம், அரசாங்க விதிமுறைகளைக் குறைப்பதற்கான திட்டங்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசினார்.
தன்னை கொல்ல நடந்த முயற்சியைப் பற்றி மஸ்கிடம் பேசிய அவர், “நான் எனது தலையை அன்று திருப்பாமல் இருந்திருந்தால், இன்று நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்க முடியாது” என்றார்.
மஸ்க்கை தனது அடுத்த அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்வதைப் பற்றிப் பேசிய டிரம்ப் “ எனக்கு எலான் மஸ்க் போன்றவர்கள் தேவை. எனக்கு வலிமையான, தைரியமான, புத்திசாலியான ஒரு நபர் தேவை. நான் கல்வித் துறையை மாநிலங்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற விரும்புகிறேன்” என்று சொன்னார்.
இந்த உரையாடல் குறித்து கமலா ஹாரிஸின் பிரச்சாரக் குழு “டொனால்ட் டிரம்பின் தீவிரவாதமும், ஆபத்தான பிராஜக்ட் 2025 திட்டம் அவரது பிரச்சாரத்தின் ஒரு அங்கம். எக்ஸில் இதைக் கேட்ட நபர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். டிரம்பின் மொத்த பிரச்சாரமும் எலான் மஸ்க் போன்ற நடுத்தர மக்களை விற்கக்கூடிய, சுய வெறி பிடித்த பணக்காரர்களுக்குச் சேவை செய்வதுதான்” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆளுநர் தேநீர் விருந்து… திமுக கூட்டணி கட்சிகள் மீண்டும் புறக்கணிப்பு!
மனுபாக்கருக்கும் நீரஜ் சோப்ராவுக்கும் கல்யாணமா? – தந்தை சொல்வது என்ன?
“ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்” – தங்கம் தென்னரசு பேட்டி!