அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வருகிற ஜனவரி மாதம் பதவி ஏற்கவுள்ளார்.
ஜனநாயக கட்சி வேட்பாளரும் அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் குழுவின் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார் டிரம்ப்.
இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ள டிரம்ப் யார் என்பதை பார்க்கலாம்…
1946-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் பிறந்த டிரம்ப், ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். டிரம்ப் நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர், பல வீடுகள், உல்லாச விடுதிகள் மற்றும் கோல்ஃப் மைதானங்களைக் கட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரியாலிட்டி டிவி ஷோக்களில் கலந்துகொள்வதும், WWE என்கிற குத்துச்சண்டை நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துக்கொண்டு தன்னைப் பற்றியும், தன்னுடைய வியாபாரத்தைப் பற்றியும் அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் தான் 2015-ஆம் ஆண்டு “மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பணத்தில் தான் மற்ற நாடுகள் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெற்றியல்ல. நான் என் தொழிலை அப்படி நடத்தினால், என்னை நானே பணி நீக்கம் செய்துகொள்வேன்.
அமெரிக்கா மீண்டும் வெற்றி பெறத் தொடங்க வேண்டும். ஒன்றாக இணைந்து அமெரிக்காவை மீண்டும் வலிமை மிக்க நாடாக மாற்றுவோம்” என்ற முழக்கத்தோடு 2016 அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையைத் தொடங்கினார். தேர்தலில் வெற்றியும் அடைந்து 45-வது அமெரிக்க அதிபரானார்.
இவரது வெற்றி அப்போதே உலக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஷிவ்ஷங்கர் மேனன், டிரம்பின் வெற்றியைப் பற்றிக் கூறுகையில் “பல நாடுகள் எதேச்சதிகாரம், பழமைவாதம், பேரினவாதம் மற்றும் வலுவான தலைமைத்துவத்தை நோக்கித் திரும்பி வருகின்றன. மேலும் குடியேற்றத்தின் மீதான கோபம் பல நாடுகளில் பேரினவாத போக்குகளுக்கு வழிவகுத்துள்ளது” என்று கூறியிருந்தார்.
ஷிவ்ஷங்கர் மேனன் கணித்தது போலத்தான் டிரம்ப்பும் தனது முதல் ஆட்சிக்காலத்தில் நடந்துகொண்டார்.
டிவிட்டரில் தனது எண்ணங்களைச் சரமாரியாகப் பகிர்வது, அரசியல் ரீதியாக எதிர்க் கருத்துக்கொண்டவர்களை மட்டுமல்லாமல் தனது சொந்த கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றவர்களை வரம்பில்லாமல் விமர்சித்தார். இதனால் ஒரு கட்டத்தில் டிவிட்டரில் டிரம்ப் கணக்கு தடை செய்யப்பட்டது.
ஈரானுடன் போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தங்கள் மற்றும் பல சர்வதேச ஒப்பந்தங்களிலிருந்து தன்னிச்சையாக அமெரிக்காவை வெளியேற்றினார். அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிராக உரையாற்றினார். குறிப்பாக இவருடைய ஆட்சிக்காலத்தில் H-1B விசாக்கள் மூலம் இந்தியாவிலிருந்து ஐடி போன்ற தொழில்நுட்ப வேலைகளுக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
இப்படிப் பல சர்ச்சைகளால் அவரது முதல் ஆட்சிக்காலம் நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் 2020-இல் 46-வது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஜோ பைடன், 306 எல்க்டோரல் குழு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
ஆனால், அந்த முடிவை ஏற்கமாட்டேன் என்று அறிவித்த டிரம்ப், அதிபர் தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது என்று சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர ஆரம்பித்தார். இதன் விளைவாக 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்ய, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்க முயன்றார்கள்.
இதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமும் அடைந்தார்கள். இதனால் டிரம்புக்கு எதிராகப் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அடுத்த அதிபரான ஜோ பைடனின் ஆட்சிக்காலம் டிரம்ப் ஆட்சியைப்போல் சர்ச்சைகள் இல்லாமல் ஓரளவுக்கு அமைதியாகச் சென்றது.
மேலும், ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் டிரம்ப் மீது 2021 இல் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது, அரசு ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துச்சென்றது, பாலியல் நடிகை ஒருவருடன் இருந்த தொடர்பை பணம் கொடுத்து மறைக்க முயன்றது, 2020-இல் ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவை தனக்கு ஆதரவாக மாற்ற முயன்றது என நான்கு கிரிமினல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவின் 47வது அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் மீண்டும் களமிறங்கினார்.
ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் விவாதங்களின் போது, ஜோ பைடன் ஞாபக மறதியின் காரணத்தால் தடுமாறினார். அதன் விளைவாக அமெரிக்கத் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி சார்பாக களமிறக்கப்பட்டார்.
தனது கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகளிலிருந்து தான் பாடம் கற்கவில்லை என்பதை இந்த முறை நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் நிரூபித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸை அவரது இந்திய பூர்விகத்தைச் சுட்டிக்காட்டி, அவர் அமெரிக்கர் இல்லை என்று கூறியது, மீண்டும் குடியேறிகளுக்கு எதிராகப் பேசியது என்று தனது பாணியைத் தொடர்ந்தார் டிரம்ப்.
ஆனால் இம்முறை டிரம்புக்கு ஆதராவாக எலான் மஸ்க் மற்றும் பல தொழிலதிபர்கள் களமிறங்கினர். குறிப்பாக ‘டிவிட்டரை’ வாங்கி ‘எக்ஸ்’ என்று அதன் பெயரை மாற்றிய எலான் மஸ்க், ‘எக்ஸ்’ மூலம் டிரம்ப்பிற்கு ஆதரவான பதிவுகளை அதிகமாக மக்களுக்கு சென்றடைய வைத்ததாக ‘Centre for Countering Digital Hate’ என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இது மட்டுமல்லாமல் இந்தாண்டு ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் போது, மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால், டிரம்ப் லேசான காயத்துடன் உயிர் தப்பித்தார். இந்த சம்பவத்தை அனுதாப அலையாக டிரம்ப் மாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில்தான், நவம்பர் 5 நடந்து முடிந்த தேர்தலில், டிரம்ப் 295 எலக்டோரல் குழு வாக்குகள் பெற்று 47வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தை எந்த வகையில் பாதிக்கும் என்பதை உலக தலைவர்கள் உற்று நோக்கிவருகிறார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உலகத்தரத்தில் ஐடி பூங்கா : அமைச்சர் எ.வ.வேலுவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ – சூரனை வதம் செய்த முருகன்
கோவையை தொடர்ந்து விருதுநகரில் ஸ்டாலின் கள ஆய்வு!
பாம்பன் புதிய பாலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து எப்போது?