தமிழ்நாட்டில் தலைநகராகத் திருச்சி இருப்பது தான் சரியாக இருக்கும். இது ஒருநாள் நிச்சயம் நடக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Trichy will be the capital of tamilnadu
திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (நவம்பர் 28) திருச்சி சென்றிருந்தார். அங்கு அவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் குடமுருட்டி பாலம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து திருச்சி தென் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கருத்துரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், ”திருச்சி மாநகரில் 100 அடி கொடியேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு தான் 100 அடி உயர கொடிக்கம்பத்தை முதன்முதலாக பார்க்கிறேன்.
திமுக கொடி எப்படி உருவானது என்று கலைஞர் என்னிடம் பலமுறை கூறியுள்ளார். அவர் ஈரோட்டில் இருந்த போது பல்வேறு கொடி மாதிரிகள் காட்டப்பட்டன. ஆனால் கொடியில் சிவப்பு நிறம் வேண்டும் என்பதற்காக தனது விரலில் கீறி அந்த ரத்தத்தைக் கொண்டு கருப்பு சிவப்புமாய் கொடியை உருவாக்கினார். கொடியை மட்டுமல்ல திமுகவையும் தனது ரத்தத்தில் உருவாக்கியவர் கலைஞர்.
திருச்சி தான் திமுகவின் கேப்டன்!
திமுக தேர்தலில் நிற்கலாம் என்று பெர்மிஷன் கொடுத்த மாவட்டமே திருச்சி தான். அன்று மட்டும் மாற்றி வாக்களித்திருந்தால் நான், அன்பில் மகேஷ் உட்பட இங்குள்ள யாருமே அமைச்சராகி இருக்க முடியாது.
இப்போது தி.க. போலவே நாங்களும் சிறு சிறு கூட்டங்களை நடத்திக் கொண்டிருப்போம். ஆனால் திருச்சி தான் அனைத்தையும் மாற்றியது. திருச்சி தான் திமுகவின் கேப்டன்.
திருச்சி தலைநகராக மாறும்!
இந்த திருச்சியைத் தலைநகராக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் கருதினார். எனக்கு அதிமுகவைப் பிடிக்காது என்றாலும் அவரின் அந்த கருத்து பிடிக்கும்.
டெல்லி ரொம்ப தூரத்தில் இருப்பதால் தான் நமக்கு மத்திய அரசாங்கம் நமக்கு அந்நியமாகத் தெரிகிறது. இந்தியாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்க வேண்டும்.
அதேபோல தமிழ்நாட்டின் தலைநகராக மத்தியில் இருக்கும் திருச்சி இருக்க வேண்டும். தலைநகர் என்பது மாநிலத்தில் இருக்கும் அனைவரும் வந்து செல்ல ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்கு திருச்சி தான் சரியானதாக இருக்கும். யாராவது ஒருவர் வருவார்கள். அவரால் இது நிச்சயம் நடக்கும்.
அன்பில் மகேஷ்க்கு என்று திமுகவில் பெரிய இடம்!
இப்போது உள்ளதை விட எதிர்காலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு என்று திமுகவில் பெரிய இடம் இருக்கும். அவர் போன்று மாவட்டத்திற்கு ஒரு தலைவர் இருந்தால் போதும். அரசியலில் உரசிப் பார்ப்பதை விட ஒதுங்கிப் போவது தான் சிறந்த குணம். அந்த குணம் அன்பில் மகேஷ்க்கு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தால் ஆசிரியர்களை சமாளிப்பது கடினமான வேலை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர்களின் போராட்டத்தை சுமூகமான முறையில் பேசி அன்பில் மகேஷ் தீர்த்து வைத்தார். அவருக்கு வாழ்த்துகள்” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகொடுத்த ’எலி துளை’ சுரங்கம் தோண்டும் முறை!
BiggBossDay57: அனன்யாவையும் விட்டு வைக்காத விஷ்ணு… பூர்ணிமாவை வெளியேற்ற மாயா பிளான்
Trichy will be the capital of tamilnadu