திருச்சி சூர்யா, கல்யாண ராமன் சஸ்பெண்ட்: பாஜக மையக் குழு கூட்டத்தில் புயல் கிளப்பிய தமிழிசை
அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யாவும், அண்ணாமலையின் தீவிர எதிர்ப்பாளரான கல்யாணராமனும் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கமலாலயத்தில் நேற்று (ஜூன் 19) நடந்த பாஜக மையக் குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டு நேற்று இரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மையக்குழு கூட்டம் நேற்று கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த மேனன் மற்றும் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் தமிழிசை வலியுறுத்தியதன் அடிப்படையில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
அதேபோல அண்ணாமலை மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை சமூக தளங்களில் வைத்த கல்யாணராமனும் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது,
”மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்திருக்கலாம், அப்படி வைத்திருந்தால் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று இருக்க முடியாது” என்று தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் மாநில தலைவர் அண்ணாமலையோ, ”அதிமுகவை மக்கள் நிராகரித்து விட்டார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் தமிழிசை, ”தற்போதைய பாஜகவில் சில மாவட்டங்களில் சமூகவிரோதிகள் நிர்வாகிகளாக இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது” என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையில் தமிழிசையை அழைத்து ஆட்காட்டி விரலை உயர்த்தி கண்டித்த வீடியோ வைரலானது. தமிழகத்தில் அண்ணாமலையோடு தமிழிசை மோதியதால் தான் அமித்ஷா அவரை கண்டித்தார் என அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக தளங்களில் பரப்பினார்கள்.
இதற்கிடையில் இன்னொரு தகவலும் வந்தது. அதாவது தமிழிசை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையிலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை, அதே நேரம் நிர்மலா சீதாராமனுக்கு தேர்தலில் போட்டியிடாமலேயே மத்திய அமைச்சர் பதவி மீண்டும் மீண்டும் கிடைக்கிறது. இதுபற்றி சில பத்திரிக்கையாளர்களிடம் தமிழிசை வருத்தப்பட்டு கூறியதாக ஒரு தகவல் நிர்மலா சீதாராமனின் ஆதரவாளர்கள் மூலமாக அவரது காதுக்குச் சென்றது. இதை உடனே அவர் அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த அடிப்படையில் தான் அமித்ஷா அந்த மேடையில் தமிழிசையிடம் சில கேள்விகளை கேட்டார் என்றும் அதற்கு தமிழிசை சில விளக்கங்களை அளித்தார்.
அந்த வீடியோ சர்ச்சைக்குப் பின் தமிழிசையின் வீடு தேடிச் சென்று சந்தித்த அண்ணாமலை, ‘அக்கா… உங்களைப் பற்றி நான் டெல்லியில் எந்த புகாரையும் கொடுக்கவில்லை’ என்று சொல்லியிருந்தார். மேலும் தமிழிசை அதுபோல எந்த இடத்திலும் நிர்மலா சீதாராமன் பற்றி பேசவில்லை என்ற ரிப்போர்ட் அமித் ஷாவுக்கு சென்றது. அப்படியானால் தமிழிசை பற்றி அமித் ஷாவிடம் புகார் சொன்னது நிர்மலா சீதாராமன் தான் என்று தெரியவருகிறது.
இதன் பிறகுதான், மையக் குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் தமிழிசை. அப்போது, தன் மீது சமூக தளத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த திருச்சி சூர்யாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழிசை.
அதே போல மாநில தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் கல்யாண ராமனையும் சஸ்பெண்ட் செய்யலாமா என்ற கேள்வியை கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக பொதுச் செயலாளர் ஏ. பி. முருகானந்தம் எழுப்பினார். அதேபோல தர்மபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமினில் வெளிவந்திருக்கும் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் மையக் குழுவில் இடம் பெற்றது.
இதனையடுத்து திருச்சி சூர்யாவையும் கல்யாண ராமனையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்வது என்று மையக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு இரவு தான் இதற்கான அறிவிப்பு வெளிவந்தது” என்கிறார்கள்.
தமிழிசை தன்னை எதிர்த்தவரை எந்த பதவியில் இல்லாதபோதும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதும் தனது தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யாவை இரண்டாவது முறையாக கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
“கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழப்பு” அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
இப்பவே கண்ணைக்கட்டுதே: அப்டேட் குமாரு