வைஃபை ஆன் செய்ததும் ட்விட்டர் நோட்டிபிகேஷன் வந்தது. அண்மையில் இடை நீக்கம் செய்யப்பட்ட ஓபிசி மாநில பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து முழுதாக விலகிவிட்டார். அந்த ட்விட்டர் பதிவை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு, மூன்று தினங்களாக டெல்லியில் இருக்கிறார். அவர் டெல்லியில் இருக்கும்போது அவரது தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
டிசம்பர் 6 ஆம் தேதி மதியம் 1.16 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திருச்சி சூர்யா, ‘அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் மாற்றப்பட வேண்டும்.
இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி’ என்று ட்விட் செய்திருந்தார்.
சூர்யா இப்படி ட்விட் செய்வதற்கு சரியாக சுமார் ஒன்றரை மணி நேரம் முன்பாக அதாவது 11.46 மணிக்கு, அண்மையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம்,
‘திருடனைப் பாதுகாத்தால் நீயும் திருடன்தான். ஒரு ஊழல்வாதியைப் பாதுகாத்தால், நீயும் ஊழல்வாதிதான். கொலைகாரனை பாதுகாத்தால் நீயும் கொலைகாரன் தான். ஒரு பெண் வன்கொடுமை செய்பவரைப் பாதுகாத்தால்?’ என்ற கேள்விக்குறியோடு முடித்திருந்தார்.
அதாவது திருச்சி சூர்யா என்ற பெண் வன்கொடுமை செய்பவரை பாதுகாத்தால் அண்ணாமலையும் ஒரு பெண் வன்கொடுமை செய்பவர்தான் என்பதைத்தான் காயத்ரி ரகுராம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு ட்விட்டுகளுக்கு இடையே பெரிய ட்விஸ்ட்டே நடந்திருக்கிறது என்கிறார்கள் தமிழக பாஜக சீனியர்கள். ‘திருச்சி சூர்யா- டெய்சி இடையே நடந்த அந்த ஆபாச உரையாடல் வெளியான பிறகு சூர்யா மீது அண்ணாமலை நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட டெய்சிக்கு ஆறுதலும் ஆதரவும் கூறிய காயத்ரி ரகுராம் ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து அண்ணாமலையை எதிர்த்து பல கருத்துகளை கூறிவந்தார் காயத்ரி ரகுராம். மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் காயத்ரி அவர் மூலமாக டெல்லி மேலிடத்துக்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்றார். மேலும் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடமும் இதுபற்றி முறையிட்டார்.
இந்த நிலையில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் பி.எல். சந்தோஷ், சுதாகர் ரெட்டி ஆகியோருக்கு இந்த ஆபாச உரையாடல்கள் கவனப்படுத்தப்பட்டன. கொஞ்சம் தமிழ் தெரிந்த அவர்கள் சூர்யாவின் ஆபாசத்தைக் கேட்டுத் தெறித்துப் போனார்கள்.
இந்நிலையில் அவர்கள் பரிந்துரையின் பேரில் திருச்சி சூர்யாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அண்ணாமலைக்கு அவர்கள் உத்தரவிட்டார்கள்.
தனது தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதை அண்ணாமலை விரும்பவில்லை.
அதனால் டெல்லியில் இருந்தபடியே இந்த சூழலை சூர்யாவுக்கு தெரியப்படுத்தி அவராகவே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி கேட்டுக் கொண்டார். அண்ணாமலையின் ஆலோசனையின்படி பாஜகவில் இருந்து தானாகவே விலகுவதைப் போன்ற அறிவிப்பை வெளியிட்டார் திருச்சி சூர்யா.
அதிலும் கேசவ விநாயகன் பற்றி கடுமையாக குறிப்பிட்டார். இதுபோல ஒரு நகர்வு நடப்பதை அறிந்துதான் காயத்ரி ரகுராம் காலை 11.46 க்கே, அண்ணாமலைக்கு நெருக்கடி தரும் ட்விட்டர் பதிவை வெளியிட்டார்.
இதற்கிடையில் திருச்சி சூர்யா மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அதில், ‘ அண்ணாமலை தமிழக பாஜகவுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலைதான் முதல்வர்.
எதிர்கால இந்தியாவின் பிரதமராக முன்னிறுத்தும் தகுதியையும் பெற்றவர் அண்ணாமலை. நான் பாஜகவில் இருந்து விலகினாலும் அண்ணாமலையின் தம்பியாக தொடர்வேன்.
இந்த என் முடிவால் எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோர் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் இனியாவது தமிழக பாஜகவினரின் நம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும்.
இவர்கள் இருவரின் தலையீடும் இல்லாமல் இருந்தால் தமிழக பாஜகவில் அண்ணாமலை அற்புதங்களை நிகழ்த்துவார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் திருச்சி சூர்யா.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கும் முருகன், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாக பதவியில் இருக்கும் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரைப் பற்றி போகிற போக்கில் காட்டமாக விமர்சிக்கும் தைரியத்தை சூர்யாவுக்கு யார் கொடுத்திருப்பார்கள்?,
இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? அண்ணாமலையின் குறிப்பறிந்துதான் சூர்யா போகிற போக்கில் இப்படி எல்.முருகன், கேசவ விநாயகன் பற்றி புழுதிவாரி இறைத்திருக்கிறார்’ என்பதுதான் பாஜகவின் சீனியர்கள் வரையில் இப்போது நடக்கிற விவாதம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
லட்சுமி யானை கடைசியாக சாப்பிட்டது என்ன?
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அர்ஜுன் சம்பத் : நடந்தது என்ன?