வைஃபை ஆன் செய்தவுடன் சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்த வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 3) தொடங்கி வைத்து கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்குவதாகதான் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி நிர்வாகிகளுக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது. ‘முதல்வரால் புக் ஃபேருக்கு வர இயலவில்லை. அமைச்சர் உதயநிதி வந்து திறந்து வைப்பார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதன்படியே அமைச்சர் உதயநிதி தனது நண்பரும் பள்ளிக் கல்வி நூலகத்துறை அமைச்சருமான அன்பில் மகேஷுடன் சேர்ந்து வந்து புத்தகக் காட்சியை திறந்து வைத்து ஸ்டாலின் உரையை வாசித்தார். அதில், ‘சென்னை புத்தகக் காட்சியை நான் திறந்து வைக்க இருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் மிகவும் ஆர்வமாக கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒன்று புத்தகக் காட்சி. அதில் அவர் கலந்துகொள்ளாதது பற்றி திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, முதல்வர் நேற்று திருச்சி சென்று வந்ததில் இருந்தே அப்செட் ஆகத்தான் இருந்தார் என்கிறார்கள்.
நேற்று திருச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட விமான நிலைய முனைய திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அந்த விழாவில் முதல்வர் உரையாற்றத் தொடங்கியதுமே… கூட்டத்தில் இருந்து, ‘மோடி… மோடி… மோடி… ‘ என்ற அலை அலையான ஆர்ப்பரிப்புக் குரல்கள் எழ முதல்வர் அப்படியே பார்த்தார். அப்போது பிரதமர் மோடி தன் பெயர் சொல்லி குரல் எழுப்பியவர்களைப் பார்த்து கையை அசைத்து அமைதியாக இருக்கச் சொன்னார். அதன் பிறகே முதல்வர் ஸ்டாலின் உரையாற்றத் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு காட்சி அரங்கேறியதை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஏற்கனவே கடந்த 2023 ஏப்ரல் மாதம் இதேபோல சென்னை பல்லாவரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சைத் தொடங்கியபோது முதல்வர் ஸ்டாலின் அவர்களே என்று சொன்னதும் சில நிமிடங்களுக்கு ஸ்டாலினுக்கு ஆதரவான குரல் அலை எழுந்தது. அதை பார்த்து பிரமித்த முருகன் சில நொடிகள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டாலினுக்கு இது பெருமிதமாக இருந்தது.
இப்படிப்பட்ட முன்னுதாரணம் நடந்திருக்கிற நிலையில், திருச்சியில் நேற்று ஸ்டாலின் பேசத் தொடங்கியபோது ‘மோடி… மோடி’ என்ற கோஷம் எழுவதும், அதை மோடியே அமைதிப்படுத்தியதும் ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருச்சி கூட்டத்தில் திமுகவினர் அதிக அளவு கலந்துகொள்ளவில்லையா? எப்படி நடந்தது இந்த சம்பவம்? என்று முதல்வரே விசாரித்திருக்கிறார். அப்போது, ‘பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரங்கத்தின் முன் பாகம் முழுவதும் திட்டமிட்டு பாஜகவினர் அமர வைக்கப்பட்டு திமுகவினருக்கு அரங்கத்தின் பின் பகுதியில் அமரவைக்கப்பட்டனர். முதல்வர் பேசும்போது முன் பகுதியில் இருந்த பாஜகவினர் தான் கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். பாஜகவினரின் இந்த ஏற்பாட்டுக்கு போலீஸாரும் உதவி செய்தனர்’ என்று அவரிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
போலீஸ் தரப்பில் என்ன நடந்தது என்று விசாரித்தபோது, ‘பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பிரதமர் அலுவலக பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரைகளின் படிதான் தமிழ்நாடு போலீசார் செயல்பட வேண்டியிருந்தது. அதேநேரம் முன் பக்கம் பாஜகவினர், பின் பக்கம் திமுகவினர் என்றெல்லாம் ஏற்பாடுகள் செய்யவில்லை. பாஜகவினர் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்கு காலை 7 மணிக்கே வரத் தொடங்கிவிட்டனர். ஆனால் திமுகவினரோ காலை 8.30 மணி முதல் 9 மணி வாக்கில்தான் வரத் தொடங்கினர்.
பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் ஒருமுறை அரங்கத்துக்குள் சென்றுவிட்டால் மீண்டும் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் வெளியேற முடியும் என்பதால் திமுகவினர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக வரலாம் என்று கூறி சென்றுவிட்டனர்.அதனால் பின் பக்கத்தில் தான் அவர்கள் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
திமுக நிர்வாகிகள் மத்தியிலும் இதுகுறித்து விவாதமாகியிருக்கிறது. ‘நிகழ்ச்சிக்கு கூட்டம் திரட்ட வேண்டிய பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷிடமும், அவரது ஆதரவு மாநகர பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முயற்சிகள் போதிய பலனளிக்காத நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன் இந்த தகவல் அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான நேருவுக்கு சென்றிருக்கிறது.
இதில் தலையிட வேண்டாம் என்றிருந்த நேரு… முதல்வர் வரும் நிகழ்ச்சியாயிற்றே என்று ஆ.ராசா, அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம் பேசி பெரம்பலூர், அரியலூரில் இருந்து திருச்சி நிகழ்ச்சிக்கு திமுகவினரை வரவழைத்திருக்கிறார். லால்குடி, துறையூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை வரவைத்திருக்கிறார்.
என்னதான் கூட்டம் திரட்டினாலும் திமுகவினர் தாமதமாக விழாவுக்கு சென்றதால் பின் பகுதியில்தான் அமர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் முதல்வர் பேசும்போது அப்படி ஒரு கோஷம் போட்டு அது நேரலையிலும் நாடு முழுவதும் கேட்கும் நிலை ஏற்பட்டுவிட்டது’ என்கிறார்கள்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிருப்தியோடே சென்னை வந்த முதல்வருக்கு கண்ணில் இருந்து நீர் வடிந்து தொந்தரவு கொடுத்திருக்கிறது. அதனால்தான் அவர் இன்றைய புத்தகக் காட்சிக்கு செல்லவில்லை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கேப்டன் மில்லர் படத்தின் 4 நிமிட காட்சிக்கு கட்: காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் 7 கோடி வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்…என்ன காரணம்?
ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணி: அமேசான் காட்டில் ஷூட்டிங்?
பாஜகவில் இணைந்த சப் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்: அண்ணாமலை சொல்வது என்ன?