தொகுதி மாறும் தொல்.திருமா… குறிவைக்கும் துரை.வைகோ- என்ன செய்யும் திமுக? 

அரசியல்

2024 எம்.பி. தேர்தல் பணிகளை பல கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன.

மாநிலத்தின் மையமாக அமைந்திருக்கும் திருச்சி மக்களவைத் தொகுதிக்காக, பல தரப்பினரும் பலத்த போட்டியில் இறங்கியுள்ளனர்.

திருச்சியின் தற்போதைய எம்.பி. திருநாவுக்கரசர், இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு வி.ஐ.பி.களும் இந்தத் தொகுதியைக் குறிவைக்கிறார்கள் என்பதுதான் சங்கதி!  

ஒருவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இன்னொருவர், ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ.

பரபரப்பு அரசியலில் இருந்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சற்றே விலகியிருக்கும் நிலையில், அவருடைய மகன் துரை வைகோ கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டிவருகிறார் என்பது புதிய செய்தி அல்ல! கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரம்வரை துரை.வைகோ போட்டி எனக் கூறப்பட்ட நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள் ம.தி.மு.க.வில்.

அவருக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதிதான் பொருத்தம் என மதிமுகவினர் எதிர்பார்த்தாலும், இப்போது அந்தத் தொகுதி காங்கிரஸ் வசம் இருக்கிறது. தற்போதைய எம்.பி.யான மாணிக்கம் தாகூர், இரண்டாவது முறையாக விருதுநகர் எம்.பி.யாக இருந்துவருகிறார்.
 
காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் அணுக்கத்தைப் பெற்றிருக்கும் மாணிக்கம்தாகூர், பத்து ஆண்டுகளுக்கு முன்னரே வெளிமாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மேற்குவங்கம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களின் மக்களவைத் தேர்தல் தேர்வுக்குழுவிலும், பின்னர் புதுதில்லி உள்ளாட்சித் தேர்தல் தேர்வுக்குழுவிலும் இடம்பிடித்த அவர், கடந்த மாதம் கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த அளவுக்கு கட்சித் தலைமையில் செல்வாக்கு படைத்த அவர், அந்தத் தொகுதியை விட்டுவிட வாய்ப்பில்லை என்கிற நிலையில், விருதுநகரை விட்டு நகர்வதுதான் ம.தி.மு.க.வுக்கு வாய்ப்பு.

அப்படி அவர்களின் பார்வையில் முதல் விருப்பமாக இருப்பது, திருச்சி தொகுதி. வைகோவின் மகன் என்பதை அழுத்தமாகச் சொல்லி, திருச்சி தொகுதியைக் கேட்டு வாங்கலாம் என்பது ம.தி.மு.க தரப்பின் முயற்சி.

திருச்சி எம்.பி. தொகுதி தங்களுக்கு சாதகம் என்பதற்கான விவரங்களை அவர்கள் எடுத்துவைக்கிறார்கள்.
 
கடந்த 2004ஆம் ஆண்டுத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ம.தி.மு.க.வின் எல். கணேசன் போட்டியிட்டார். அதில் அவர் 4,50,907 வாக்குகள் அதாவது 63.59 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அதே தி.மு.க. கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்பதில் சந்தேகமில்லை; வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பதைத்தான் பேசவேண்டி இருக்கும் எனப் பரவசத்தோடு எதிர்பார்க்கிறார்கள், ம.தி.மு.க. தரப்பில்!

இதே கூட்டணி வலுவை முக்கியக் காரணமாக வைத்து, விசிக தலைவர் திருமாவளவனும் திருச்சி தொகுதியைக் குறிவைக்கிறார் என்கிறார்கள்.

சிதம்பரம் தொகுதியில் 2009ஆம் ஆண்டு முதல் முறையாகவும், 2019 தேர்தலில் இரண்டாவது முறையாகவும் வெற்றிபெற்று இப்போது எம்.பி.யாக இருக்கிறார், தொல். திருமா. 2019 தேர்தலில் கடைசி நேரம்வரை அவரின் வெற்றி இழுபறியாகவும் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்திவிட்டது என்பதை கசப்போடு அசைபோடுகிறார்கள் விசிகவினர்.


குறிப்பாக, 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தொல்.திருமா வெற்றிபெற முடிந்தது என்பதில் அவர்களுக்கு பெரும் தாங்கலாகவே இருக்கிறது.  
அப்படியொரு நிலைமை இன்னொரு முறை நேர்ந்துவிடக்கூடாது என்பது விடுதலைச் சிறுத்தைகளின் பரவலான எண்ணம்.

இதனால் அவர் அங்கிருந்து தொகுதி மாறுவதே நல்லது என்பதும் விசிகவினரின் விருப்பம். அப்படி இடம் மாற்றம் என்கிறபோது, விசிக தரப்பில் இரண்டு தொகுதிகள் மீது கண்வைத்துள்ளனர்.

ஒன்று, திருவள்ளூர் தனித் தொகுதி. வி.சி.க. பொதுச்செயலாளர்களில் ஒருவரான துரை. இரவிக்குமார், 2014 தேர்தலில் தி.மு.க. அணி சார்பாகப் போட்டியிட்டார். அப்போது, அவர் 24.32 சதவீதம் வாக்குகளைப் பெற்றார் என்பதை வி.சி.க.வினர் நினைவூட்டுகிறார்கள்.  
 
இதேசமயம், விசிகவில் இன்னொரு கருத்தும் வலுவாக உருவெடுத்துவருகிறது. கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலினுக்கு அடுத்த தலைமுறை தலைவர்களில், பல்வேறு தரப்பினரும் மதிக்கக்கூடிய ஒரு தலைவராக தொல்.திருமா பெயரெடுத்துவருகிறார். குறிப்பாக, இளம் தலைமுறையினர், பெண்கள் மத்தியில் அவருக்கு கணிசமான ஆதரவு காணப்படுகிறது.

இப்படியான சாதக சூழலில், பொதுத்தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்பது வி.சி.க.வினரின் மனதில் நீண்டகாலமாக இருந்துவரும் ஆதங்கமாக இருக்கிறது. அப்படியொன்று நிகழ்ந்தால் ஜனநாயக நீரோட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகவும் அமையக்கூடும்.  

இந்த வகையில், திருச்சி தொகுதி தொல்.திருமாவுக்கு தோதாக இருக்கும் என்பது விசிகவினரின் அழுத்தமான நம்பிக்கை. அவர்களும் முன்னைய தேர்தல் வெற்றி ஒன்றை நினைவூட்டுகிறார்கள்.

பா.ஜ.க. சார்பில் 1998இல் திருச்சி எம்.பி.யான முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் திடீரென மறைந்துவிட்டார். அதையொட்டி, 2001ஆம் ஆண்டில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்ட தலித் எழில்மலை வெற்றிபெற்றார்.

பா.ம.க.வில் இருந்த அவர் கட்சிதாவி அ.தி.மு.க.வுக்குச் சென்று திருச்சி எம்.பி.யாக  ஆக முடிந்தது என்கிறபோது, பல தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றுள்ள திருமாவளவன், பிரமாண்ட வெற்றியைப் பெறமுடியும் என அவருடைய ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

இதைத்தாண்டி, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரமும் தொல்.திருமாவுக்கு சாதகமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மதிமுகவோ விசிகவோ திருச்சியைக் குறிவைப்பதன் அடிப்படை, திமுக அணிக்கு அங்கு இருக்கும் சாதகமான நிலைமைதான்!

சட்டப்பேரவைத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி) என அனைத்து தொகுதிகளையும் தி.மு.க.வே கைப்பற்றியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியிலும் 5 நகராட்சிகளில் துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி ஆகிய நகராட்சிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்றது. அதைப்போலவே, மொத்தமுள்ள 14 பேரூராட்சிகளிலும் பெரும்பான்மை வெற்றி பெற்றது.

முன்னதாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 24 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில், 18 இடங்களைப் பிடித்தது திமுக. அதிமுகவுக்கு 5 இடங்களும் காங்கிரசுக்கு ஓர் இடமும் மட்டுமே கிடைத்தன.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியில் 51 இடங்களில் அதிமுக வெல்ல, 146 இடங்களில்  வெற்றி பெற்றது, திமுக.
 
14 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளிலுமே திமுகவே வெற்றிபெற்றது.  

இந்த சூழலில், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தி.மு.க. தரப்பிலும் பலர் முஸ்தீபு காட்டிவருகின்றனர்.

மொத்தத்தில், அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில், திருச்சிராப்பள்ளி தொகுதி எந்தக் கட்சிக்கு, யாருக்கு கிடைக்கும் என்பது பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறது!

-தமிழ்க்கனல்

மனிதநேய சாமி: யார் இந்த மயில்சாமி?

கடைசியாக ரஜினியைப் பற்றிப் பேசிய மயில்சாமி

+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *