முன்னாள் முதல்வர் கலைஞர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனை நீதிமன்ற காவலில் அனுப்ப திருச்சி நீதிமன்றம் மறுத்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, கலைஞர், ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட திமுக ஐடி விங் மாவட்ட அமைப்பாளர் அருண் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருச்சி அழைத்து சென்று திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
போலீசார் தரப்பில் சாட்டை துரைமுருகனை 15 நாட்களில் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி சுவாமிநாதன் துரைமுருகனை விடுவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “தொடர்ச்சியாக என் மீது 11 வழக்குகளை திமுக அரசு பதிவு செய்தது. அதேபோல மீண்டும் என் மீது ஒரு வழக்கை போட்டு முடக்க நினைத்தது.
இது அப்பட்டமான ஒரு பொய் வழக்கு என்று நீதிமன்றத்தில் எங்களுடைய வாதங்களை எடுத்து வைத்தோம். 14 ஆண்டுகால நாம் தமிழர் கட்சி அரசியலில் நாங்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காக தான் பாடுபட்டு வருகிறோம்.
எனது யூடியூப் பக்கத்தில் 1200-க்கும் மேற்பட்ட காணொலிகள் பதிவு செய்துள்ளேன். அதில் 800 காணொலிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும் பிரச்சனைகளையும் பதிவு செய்துள்ளேன். அந்த மக்களுக்கு ஆதரவாக நின்றுள்ளேன். ஆனால் என் மீது பிசிஆர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
கலைஞர், ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து பாடிய பாடல் 31 ஆண்டுகாலமான அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் பாடப்பட்டு வருகிறது. அதை மேற்கோள் காட்டி தான் பேசினேன். நான் எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை. சண்டாளன் என்பது சாதிய சொல் என்று எனக்கு தெரியாது.
ஆனால், நீதியரசர் நேர்மையின் பக்கம் நின்று இந்த வழக்கு செல்லாது என என்னை விடுவித்திருக்கிறார். உடனடியாக இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள்… எதற்காக?
பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான கண்ணாடி எது?