திருச்சி மாநாடு: ஓபிஎஸ் முடிவில் திடீர் மாற்றம்!

அரசியல்

அதிமுகவை யார் முழுமையாக கைப்பற்றுவது என்ற போட்டி ஒபிஎஸ் இபிஎஸ் இருவருக்குமான யுத்தமாக  மாறி வருகிறது, சட்டப் போராட்டத்தில் இபிஎஸ் வெற்றி பெற்றாலும்… எடப்பாடி பொதுச் செயலாளர் என்பதை ஏற்கக் கோரிய வழக்கில் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டு ஒரு தடை போட்டுள்ளது. இதனிடையில் ஒபிஎஸ், திருச்சியில் மாபெரும் மாநில மாநாடு நடத்த  அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.   

ஏப்ரல் 10 ஆம் தேதி ஒபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை திருச்சியில் கூட்டினார். அந்த கூட்டத்தில், “திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும். தொண்டர்களை அழைத்து வருவதற்கு வாகன செலவுகள், வருபவர்களுக்கு சாப்பாடு மற்றும் செலவுக்கு தலைமை பணம் கொடுக்கும்.

ஆட்களை திரட்டும் வேலைகளை மட்டும் செய்யுங்கள், எத்தனை பஸ் மற்றும் வேன் கார் வரும் என்பதை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று மாவட்டச் செயலாளர்களிடம் தனிப்பட்ட முறையில் ஒபிஎஸ், வைத்திலிங்கம் மற்றும் கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

அதன்படி அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்களது மாவடங்களில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.

அந்த ஆலோசனைக் கூட்டங்களில், “அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் அவரைத் தொடர்ந்து கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோர் திருத்தாத சட்டத்தை எடப்பாடி பழனிசாமி திருத்தியுள்ளார். அதாவது பொதுச்செயலாளர் போட்டிக்கு 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழியவேண்டும் என்று திருத்தப்பட்ட சட்டத்தை எந்த தொண்டனும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

இந்த துரோக கும்பல் கட்சியை கபளீகரம் செய்து விட்டனர். அவர்களிடம் கட்சியை விடக் கூடாது மீட்க வேண்டும். அதனால் நமது பலத்தை காட்ட திருச்சி மாநாடு அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு கூட்டத்தைக் கூட்டி செல்லவேண்டும். 

பஸ் வாடகை செலவு  மற்றும் வரும் நபர்களுக்கு தலைக்கு 500 ரூபாய், சாப்பாடு செலவு அனைத்தும் தலைமை கொடுக்கும் யார் யாருக்கு எத்தனை பஸ் வேண்டும், வேன் வேண்டும்” என்று ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தங்களது நிர்வாகிகளிடம் பட்டியல் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.  

ஒன்றிய செயலாளர் மற்றும் நகர செயலாளர்கள் ஒரு பஸ் இரண்டு பஸ் என கேட்டுள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்திற்கு இரண்டு பஸ் கேட்டுள்ளனர் (வடக்கு ஒன்றியம் தெற்கு ஒன்றியம்) 

தஞ்சை, மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் கிளைக்கு ஒரு பஸ் அல்லது வேன் கேட்டுள்ளனர்.  இப்படி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தங்களுக்கு தேவைப்படும் வேன், பஸ் கணக்கை வைத்திலிங்கத்துக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி மாவட்ட செயலாளர்களைத் தொடர்பு கொண்ட வைத்திலிங்கம், “ஓபிஎஸ் அண்ணன் ஒரு முக்கிய முடிவெடுத்திருக்கிறார். அதாவது திருச்சியில் நாம் நடத்தபோவது மாநில மாநாடு அல்ல, மண்டல மாநாடுதான். அதனால் திருச்சி மண்டலத்தை தவிர்த்து மற்ற மண்டலத்திலிருந்து நிர்வாகிகள் மட்டும் வந்தால் போதும் மற்றவர்கள் விருப்பம் உள்ளவர்கள் வரட்டும்” என்று கூறியுள்ளார். 

வைத்திலிங்கம் தெரிவித்த தகவலை அடுத்து, ஏப்ரல் 15 அன்று மாலை 3 மணிக்கு மேல் அனைத்து நிர்வாகிகளையும் தொடர்புகொண்ட மாவட்ட செயலாளர்கள், ”பஸ், வேன் அமர்த்த வேண்டாம் திருச்சி மாநாட்டுக்கு நிர்வாகிகள் மட்டும் வந்தால் போதும். கூட்டத்தை திருச்சி சுற்றுப்புற மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் இருந்து மட்டும் திரட்டிக் கொள்வார்களாம்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவு மாசெக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்துகிறார்களா, அல்லது கூட்டம் கூடாது என்ற அச்சமா என தலைமை நிர்வாகிகளிடம் கேட்டபோது, “திருச்சி மாநாட்டுக்கு ஒரு லட்சம் பேர் கூட்டத் திட்டமிட்டு வேலை செய்து வருகிறோம். திருச்சி மண்டலத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை திரட்டி விடுவோம். அதனால் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு பஸ்க்கு 50 ஆயிரம் செலவு என்பது அதிகம். மேலும் திருச்சியோடு நில்லாமல் தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திலும் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.

முக்குலத்தோர் சமூகத்திலிருந்து சில சாதி சங்கங்கள் எங்கள் அமைப்போடு கலந்து கொள்கிறோம் என கேட்டிருக்கிறார்கள். தயவு செய்து அப்படி வரவேண்டாம் சாதி கட்சி என்று முத்திரை குத்தி விடுவார்கள். அதனால் அதிமுக போர்வையில் வாருங்கள் என்று சொல்லியுள்ளோம்.

திருச்சி மாநாட்டுக்குப் பிறகு அடுத்த இரண்டு மாதத்தில் சேலத்தில் கொங்கு மண்டல மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவு தலைமை நிர்வாகிகள்.

-வணங்காமுடி

சென்னையில் 30,000 மரக்கன்றுகள்: மாநகராட்சி திட்டம்!

அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை!

OPS State Conference
+1
0
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “திருச்சி மாநாடு: ஓபிஎஸ் முடிவில் திடீர் மாற்றம்!

  1. உண்மையாக அடிமட்டத் தொண்டன்தான் மிகவும் குழம்பிப் போயுள்ளான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *