திருச்சி ஆதீனம் என்ற சாமியாரை பற்றி மின்னம்பலம். காம் இணைய இதழில் நேற்று (டிசம்பர் 30) செய்தி வெளியிட்டிருந்தோம்.
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, அன்பில் மகேஷுக்கு ஆசி தந்த தில்லாலங்கடி சாமியார் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில்,
அவர் சில அரசியல் தொடர்புகளை வைத்துக் கொண்டு பதவிகளைப் பெற்றுத் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியுள்ளதாக நம்மிடம் பெயர் வெளியிட விரும்பாத சிலர் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் அந்த செய்தியை எழுதிய நாம் சாமியாரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் மௌன விரதத்தில் இருக்கிறார் என்ற பதிலே கிடைத்தது.
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டு அதையே தன்னிடம் பணம் பெற்றவர்களுக்கு அனுப்புவதாக புகார் கூறியவர்கள் தெரிவித்தனர்.
மேலும், ‘போலீஸிடம் போய் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள்’ என்றும் அந்த சாமியார் தெரிவித்ததாகவும் நம்மிடம் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் நமது செய்தியை படித்துவிட்டு திருச்சி ஆதீனம் என்று தன்னை அழைத்துக் கொள்கிற அந்த சாமியார் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் அதாவது 1.43 மணிக்கு தனது ட்விட்டர் பதிவில் சில பதிவுகளை இட்டிருக்கிறார்.
அந்த ட்விட்டர் பதிவுகளில், “திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். திமுக அரசை ஆதரிப்பதால் காழ்ப்புணர்ச்சி. 2004முதல் 2007வரை மதுரை ஆதீனத்திலும் 2007முதல் திருவாவடுதுறை ஆதீனம் 23ஆவது சந்நிதானம் பரிபூரணம் ஆகும் வரை அவருடன் பயணித்து உள்ளோம்.
குரு அவர்தான். 2010இல் தற்போதைய 24ஆவது ஆதீனம் சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் புகைப்படம். அப்போதே சிரசில் ருத்ராட்சம் தாங்கி உள்ளோம். இல்லை என்றால் அப்போதைய ஆதீனம் கண்டித்து இருப்பார்.
சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செய்தி வருவது கண்டிக்கத்தக்கது” என்று தன் மீதான புகார்களுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார். மேலும் திருவாவடுதுறை ஆதீனம் 2010ல் தம்பிரானாக இருந்தபோது தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் என ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார் திருச்சி ஆதீனம்.
–வேந்தன்