முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37வது நினைவுநாள் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் கருப்புச்சட்டையில் வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி சூளுரை!
எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த பேரலை, அண்ணா விட்டுச் சென்ற திராவிடக் கனவை ஏந்தி நின்று, மக்களுக்கான இயக்கமாம் அதிமுகவை கண்டு, அனைவரும் அனைத்தும் பெறும் நல்லாட்சிக்கான இலக்கணம் வகுத்த நம் ஒப்பற்ற தலைவர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திராவிட நாயகர், நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாளான இன்று,
மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழும் நம் உயிர்நிகர் தலைவரின் பெரும்புகழைப் போற்றி வணங்கி, புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திட உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.
முன்னோடி… ஆசான்!
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது எக்ஸ் பதிவில், “நான் குழந்தையாகத் தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர்; நான் சிறுவனாக சினிமா புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர்; மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியர் ஆனவர்… அன்புக்கும் மரியாதைக்குமுரிய உறவாக நிலைத்துவிட்ட எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று. எந்நாளும் மறையாத நினைவுகளைத் தந்தவரை இந்நாளில் வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மனங்களை வென்ற பாரத ரத்னா
மத்திய பாஜக இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி… மக்களின் மனதை வென்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்…!
சினிமாவில் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, மக்கள் தொண்டாற்ற அரசியலில் அடியெடுத்து வைத்து, தேர்தல் களம் புகுந்து, தமிழக முதலமைச்சராக பதவியேற்று, தமிழக மக்களின் மனங்களை வென்றெடுத்த பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன்.
உழைக்கும் மக்கள், பழங்குடி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் விவசாயிகள், மீனவர்கள்,பெண்கள், காவல்துறையினரை போற்றும் விதமான கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடித்து அதனை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
திரைப்படங்கள் மூலம் உயர்ந்த கருத்துகளை எடுத்துக் கூறி மக்கள் மனங்களை கவர்ந்தவர். அரசியல் களத்தில் திமுகவின் கபட நாடகங்களை தோலுரித்துக் காட்டியவர். பிரிவினைக் கருத்துக்களையும் இந்து விரோத எண்ணங்களையும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதவர். ஏழை மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த எம்ஜிஆர் அவர்கள் அந்த மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்தவர்.
நலத்திட்டங்கள் மற்றும் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பு காரணமாக மக்களின் மனதில் நீங்காத தலைவராக இன்றளவும் இடம் பெற்றிருக்கிறார். தமிழக மக்களின் மனங்களை வென்ற அந்த மாபெரும் தலைவருக்கு அவரது நினைவு நாளில் எனது இதய பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”5, 8-ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது” : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!
‘என் ஆன்மா ஒரே இடத்தில் இருக்காது’ – தாய்லாந்தில் இருந்து திரிஷா போட்ட போஸ்ட்!
எங்களது எதிரிகள் யார் தெரியுமா? – கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு!