தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக இன்று (மே 11) பதவியேற்ற டி.ஆர்.பி ராஜா, சிறப்பாக பணியாற்றி முதல்வரின் உள்ளத்தில் இடம்பெற வேண்டும் என்று அவரது தந்தை டி.ஆர்.பாலு விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.
அமைச்சராக பதவியேற்ற அவருக்கு, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜாவின் தந்தையும், தி.மு.க. பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றி. எனது மகன் டி.ஆர்.பி. ராஜா சிறப்பாக பணியாற்றி தலைவரின் உள்ளத்தில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனது முக்கியமான ஆவல்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா