இந்த ஆண்டு ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் சென்றார்.
இந்தநிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இன்று (ஜூன் 28) சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தொழில்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை, கரூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும் உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 60 சதவிகித பணிகள் தொடங்கியிருக்கிறது. அதாவது கையெழுத்தான 631 ஒப்பந்தங்களில் 379 பணிகள் தொடங்கியுள்ளது.
இனி அடுத்த கட்டமாக வெளிநாடு முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழக அரசு தொடர் நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. அமெரிக்காவில் பெருநிறுவன முதலீட்டாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, முதலீடுகளை ஈர்ப்பதற்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
9 மாணவிகளுக்கு வைர கம்மல், மோதிரத்தை பரிசளித்த விஜய்
செய்தியும் கார்த்திக் விளக்கமும்!