டாவோஸ் பொருளாதார மாநாட்டில் நடந்தது என்ன? : பட்டியல் போட்ட டி.ஆர்.பி.ராஜா

Published On:

| By christopher

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை உணராமல் வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ ‘கிண்டி’த் தருவதை ஆளுநர் ஆர்.என்.ரவியும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மென்று கொண்டிருக்கிறார்கள் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஜனவரி 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum-WEF2025) தமிழ்நாடு தனி முத்திரையைப் பதித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. trb rajaa reply

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகள்-வல்லுநர் குழுவும் தொடர்ந்து பங்கேற்று, மாநிலத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் என்பது முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போடுவதற்கான அரங்கமல்ல. இதை அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேச முதல்வரும் தெளிவாக-விரிவாக, பொருளாதார அறிவாற்றல் உள்ள அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெரிவித்திருக்கிறார்.

உலகளாவிய தொழில் வளர்ச்சி எந்தத் திசையில் பயணிக்கிறது, அதற்ககேற்ப உலகில் உள்ள நாடுகள் தமது தொழிற்கொள்கைகளை எப்படி வகுத்துள்ளன, அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்தெந்த துறையில் முதலீடுகள் பெருகும் அறிந்துகொள்ளவும், பரிமாறக்கொள்ளவுமான உலக நாடுகளின் சந்திப்பு மையம்தான் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றம் உள்ளிட்ட தகவல்களை முதல்வரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் பங்கேற்று, உலக நாடுகளில் எவற்றுடன் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்தலாம் என்பதற்கான சந்திப்புகள், புதிய நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பான விளக்கங்கள் ஆகியவற்றை முன்னெடுக்கும் அருமையான வாய்ப்பு அமைந்தது.

டாவோஸ் மாநாட்டில் நடந்தது என்ன?

கடந்த மே 2021 முதல் மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முன்னெடுத்த தொழிற்கொள்கையாலும், முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு ஆகியவற்றாலும் பன்னாட்டு-உள்நாட்டு நிறுவனங்களுடன் 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதன் விளைவாக 10,07,974 ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பதற்கான வாய்ப்புகளும், 19,17,917 வேலைவாய்ப்புகளுடன் 31,53,862 மொத்த நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சூழலை அமைத்து, தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட முறையில் பல தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்பை வழங்கி, உற்பத்தியைத் தொடங்கியிருப்பது குறித்த விவரங்களை டாவோஸில் சந்தித்த உலக நாடுகளின் நிறுவனங்களிடம் விளக்கி, அவர்களைத் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடந்துள்ளன.

சிங்கப்பூர் நாட்டின் துணை பிரதமர் கான் கிம் யோங் அவர்களுடனான சந்திப்பின் வாயிலாக செமிகண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம், மருந்துகள், உணவு ஏற்றுமதி ஆகியவை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, சாதகமான பதில்களைப் பெற்றுள்ளோம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டோக் அல் மார்ரி அவர்களுடனான சந்திப்பில் உணவு ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஐக்கிய அரபு நாடுகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்ச்ர பந்தர் அல்ஹோர்யெஃப் அவர்களுடனான சந்திப்பில் சவுதி அரேபிய அரசாங்கத்தின் தொழில்துறை சார்ந்த திட்டங்களுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிகரமான உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப சூழலியல் கட்டமைப்புப் பொருந்தி வருவது குறித்து ஆக்கப்பூர்வமாகப் பேசப்பட்டுள்ளது.

வானியல் தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங், நீடித்த தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஐரோப்பாவுடனான தமிழ்நாட்டின் தொடர்புகள் குறித்து ஃபின்லாந்து நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவு வளர்ச்சித் துறை அமைச்சர் வில்லி டாவியோ அவர்களுடன் நடந்த சந்திப்பில் ஆராய்ச்சித்துறைகளில் இந்தியாவும் ஃபின்லாந்தும் இணைந்து செயலாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா ஃபாக்ரோவுடன்
நடந்த சந்திப்பில் பல்வேறு துறைகள் சார்ந்த கூட்டுத் தொழிற்திட்டங்களுக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழில் சூழலியல் கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் தனது உற்பத்தி அடித்தளத்தை விரிவுபடுத்தும் வகையில் மின்னணு துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சாதகமான பதிலை அளித்துள்ளது. குறைந்தபட்சம் இரண்டு புதிய தகவல் மையங்களுக்கான முதலீட்டிற்கானப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறியுள்ளன.

உலகளாவிய உணவு பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று தன்னுடைய உற்பத்திப் பொருட்கள் சார்ந்த முதலீட்டிற்கு ஆயத்தமாகியுள்ளது.

பிரபலமான உணவுத் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டின் தளவாடக் கட்டமைப்பு மற்றும் வேளாண் வளர்ச்சியை அறிந்து முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

ஜி.சி.சி மையங்களை அமைத்திட இரண்டு பெரிய நிதி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இரண்டு மருந்து தயாரிப்பு நிறவனங்கள் தங்களுடைய ஜி.சி.சி மையங்களுடன் உற்பத்தி நிறுவனத்தை அமைக்கவும் ஆர்வம் தெரிவித்துள்ளன.

டிட்கோ நிறுவனம் மூலமாக உருவாக்கப்படும் தமிழ்நாடு அறிவுசார் நகரம் குறித்து அறிந்த பன்னாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் நம்முடன் இணைந்து ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இருதரப்பு கலந்துரையாடல்களின் வழியே மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி, தயாரிப்புகளில் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு, மிகச்சிறந்த மையமாகத் திகழ்வதை உலக நாடுகளிடம் உறுதி செய்துளோம்.

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் இந்தியா பெவிலியனைத் தொடங்கி வைக்கும் நிகழ்விலும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மராட்டிய மாநில முதல்வர் மற்றும் சில மாநிலங்களின் அமைச்சர்களுடன் இணைந்து அந்த நிகழ்வில் பங்கேற்று, தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் உருவாகியுள்ள தொழில்வளர்ச்சியையும், தொழிற்கட்டமைப்புகளையும், புதிய முதலீடுகளுக்கான சூழலையும் விளக்கி, ஏற்கனவே தொழில்துறையில் வளர்ந்துள்ள மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு ஆற்றி வரும் முக்கியப் பங்கினைக் குறிப்பிட்டேன்.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்பது உலக அரங்கில் வியப்புடன் கவனிக்கப்படுகிறது. பல மாநிலங்கள் உள்ள ஒரு நாட்டில் ஒரேயொரு மாநிலம் எப்படி இந்தளவிற்கானப் பங்களிப்பை செய்ய முடிகிறது என்பது குறித்து மற்ற நாடுகளும் அறிந்துகொள்ளும் வகையில் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் Women In Tech Hub அமர்வில் தமிழ்நாடு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது.

இத்துறை சார்ந்த வல்லுநர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது தமிழ்நாட்டில் கடந்த நூறாண்டுகளாக திராவிட இயக்கம் முன்னெடுத்த பாலின சமத்துவம், கல்வி வாய்ப்பு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, அவர்களை அதிகாரமயப்படுத்துதல், திராவிட மாடல் அரசின் விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதி, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படும் உயர்தர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்க முடிந்தது.

இந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, ஜப்பான் நாட்டில் இதற்காகவே ஒரு தனிக் கூட்டம் நடத்துவதற்கும் அதில், தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து உலக நாடுகள் பங்கேற்கும் கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எடப்பாடியின் அற்பதனமான அறிக்கை!

‘டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என்பதை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Econmic advisary council report to pm report – EAC-PM) அறிக்கையை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்! இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து கொள்ளாமல் அற்பதனமாக அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1960-61ல் 8.7 சதவிகிதமாக இருந்தது. அது 2023-2024-ல் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனி நபர் வருவாயைப் பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சராசரி 2023-2024-ல் 171.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும் 2023-24-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30 சதவிகித பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது.

உலக நாடுகள் வியக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்கட்டமைப்பும், பெண்களின் பங்களிப்பும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையுமில்லாமல் வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ ‘கிண்டி’த் தருவதை ஆளுநரும் எதிர்க்கட்சித் தலைவரும்
மென்று கொண்டிருக்கிறார்கள்” இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share