திருக்குறளின் ஆன்மாவை பறித்துவிட்டார் ஜி.யு.போப்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு!

அரசியல்

ஜி. யூ. போப் மொழிபெயர்த்த திருக்குறளில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் இன்று (ஆகஸ்டு 25) வழங்கினார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அப்பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர்,  மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

”திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாக சுருங்கிவிட்டது. ஆனால் திருக்குறள் என்பது அதற்கு மேலானது.

திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. நான் தமிழக ஆளுநராக பதவியேற்றபோது திருக்குறள் புத்தகம்தான் அதிக அளவில் பரிசாக கிடைத்தது.

அதில் பெரும்பாலானவை   ஜி.யூ.போப் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும். ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு தான் சிறந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு  என ஏற்கப்பட்டுள்ளது, ஆனால், ஜி.யூ.போப்பின்  திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது.

போப்பின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவமாக இருக்கிறது” என்று ஆளுநர் கூறினார்.

மேலும் அவர், “அனைத்துக்கும் பொதுவாகிய ஆதிபகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர். பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருக்குறளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒரு பொருளாகவும், சந்தையாகவும், கலாச்சாரம் இல்லாத நாடாக காட்ட முயன்றனர், ஆனால் இந்தியா அவ்வாறு இல்லை, இந்தியா கலாச்சாரம் நிறைந்த, பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது.

பிரஞ்சு மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான கருபொருட்களை தமிழ் அறிஞர்கள் வெளிக்கொணர வேண்டும்.

அதேபோல, தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிக பழமையானது ஆகும். 3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் யோக கலையின் முக்கியத்துவத்தை தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த விவகாரங்களை மாணவர்களும் இளம் தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றும் ஆளுநர் பேசியுள்ளார்.

கலை.ரா

3 பல்கலைக் கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
6
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *