விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (செப்டம்பர் 7) தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்தும் விஷம்போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தண்டவாளத்தில் போராட்டம்
சென்னையில் கிண்டி ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற ரயிலை மறித்து நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சென்னை காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர் ஆகியோர் கிண்டி ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம் காரணமாக கிண்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
500 பேர் கைது
திருநெல்வேலியில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
வள்ளியூர், களக்காடு, முக்கூடல், வீரவநல்லூர், வி.கே.புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருநெல்வேலி மாநகரத்தை பொறுத்தவரையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாளையங்கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தள்ளுமுள்ளு – சு.வெங்கடேசனுக்கு தசை பிடிப்பு
மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து மதுரை ரயில்வே நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காவல் துறையினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சு.வெங்கடேசனின் கைகளில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. சு.வெங்கடேசன், “பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதிகரித்தது. கேஸ் சிலிண்டர் விலையை 1,400 ரூபாய் வரை உயர்த்திவிட்டு தற்பொழுது 200 ரூபாய் குறைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சிஏஜி அறிக்கையில் பாஜக அரசின் டோல்கேட் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாட்டில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் வாராக்கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டு அம்பானி, அதானியின் கடன்களைத் தள்ளுபடி செய்கிறது. பாஜக அரசின் ஊழல்களைத் திசை திருப்புவதற்காக தற்பொழுது பாரத் – இந்தியா என நாட்டின் பெயரை மாற்றுவதாக கூறி கொண்டிருக்கின்றனர்” என குற்றம் சாட்டினர்
இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மோனிஷா
சனாதனம்: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்?
ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!