சென்னை திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே அக்டோபர் 11ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில், கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்கா நோக்கி சென்றுகொண்டிருந்த பாக்மதி அதிவிரைவு ரயில் தடம்புரண்டு, லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில் 13 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த 19 பயணிகள் ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் பொன்னேரியில் உள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று அதிகாலை 4.45 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இதற்கிடையில் விபத்துக்குள்ளான பகுதி சீரமைக்கப் பட்டுவருகிறது.
தொடர் ரயில் விபத்துகளிலிருந்து மத்திய அரசு இதுவரை பாடம் கற்கவில்லை என்று நாடாளுமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடரும் ரயில் விபத்து
இந்த ரயில் விபத்து கடந்த 2023 ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி இரவு ஒடிசா மாநிலம் பாலஷோரில் நடந்த ரயில் விபத்தை ஞாபகப் படுத்துகிறது.அன்றைய தினம் சுமார் 128 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த கொரமண்டல் விரைவு ரயில், தவறுதலாக லூப் லைனிற்கு மாறி அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.
அதுமட்டுமல்லாமல் கொரமண்டல் விரைவு ரயிலின் சில பெட்டிகள் அருகில் சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹௌரா விரைவு ரயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 293 பயணிகள் பலியானார்கள் மற்றும் 1100 பேர் படுகாயம் அடைந்தனர். ரயில்வேயின் சிக்னல் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று அப்போது சொல்லப்பட்டது.
தொடர்கதையாகிய விபத்துகள்
இந்த மாதிரி ரயில் விபத்துகள் இந்தியாவில் தொடர்கதை ஆகியுள்ளது. இந்த ஆண்டை எடுத்துக்கொண்டால், ஜனவரி முதல் ஜூலை வரை 19 ரயில் விபத்துகள் நடந்திருக்கிறது.
ஜூலை மாதம் அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து சண்டிகருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் அருகே தடம் புரண்டது.
இந்த விபத்தில் 31 பேர் காயமடைந்தனர். ரயில் தண்டவாளங்கள் சரியாகப் பூட்டப்படாததால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று விபத்தை ஆய்வு செய்த ஐந்து நபர் குழு தெரிவித்தது.
ஜூன் மாதம் 17ஆம் தேதி மேற்கு வங்காளம் மாநிலம் டார்ஜிலிங் அருகே சரக்கு ரயில் ஒன்று, அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் மீது மோதியது.
இதில் 10 பயணிகள் பலியானார்கள் மற்றும் 43 பயணிகள் படுகாயமடைந்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்புத் துறையின் முதன்மை ஆணையர் ஜனக் குமார் கர்க் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், ஆட்டோமெட்டிக் சிக்னல் சிஸ்டத்தை பயன்படுத்துவதில் இருந்த குறைபாடுகளால்தான் இந்த விபத்து ஏற்பட்டது.
மேலும் ஆட்டோமெட்டிக் சிக்னல் சிஸ்டத்தை பற்றி ரயிலை இயக்கும் லோகோ பைலட்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தேவையான அளவிற்குப் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இதுமட்டுமல்லாமல் இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லோகோ பைலட்களுக்கு வாக்கி-டாக்கிகள் அளிக்கப்படவில்லை. அவர்கள் கைப்பேசி மூலமாகத் தகவல்களை பரிமாறி கொண்டிருந்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இது போல், இந்தாண்டு பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்தில் ஜூன் மாதம் நடந்த ரயில் விபத்து, மார்ச் மாதம் மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் நடந்த ரயில் விபத்து, ஜார்கண்ட் மாநிலம் ஜமாதாராவில் பிப்ரவரி மாதம் நடந்த விபத்து என அடுக்கிக்கொண்டே போகலாம்.
422 ரயில் விபத்துகள்…
சரியான பராமரிப்பு இல்லாததால்தான் இதுபோல் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் குற்றம்சாட்டி வருகிறார்கள்.இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் 2022 ஆண்டு வெளியிட்ட அறிக்கையும் உறுதிபடுத்துகிறது.
அந்த அறிக்கையில், “ தண்டவாளங்களை ஆய்வு செய்வதில் 30 முதல் 100 % வரை குறைபாடுகள் உள்ளது.2017 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை தடம் புரல்வாள் ஏற்பட்ட 422 ரயில் விபத்தில் 171 விபத்துகள் ரயில் தண்டவாளங்கள் சரியாக பராமரிக்கப்படாததால்தான் நடந்துள்ளது.
63% ரயில் விபத்து விசாரணை அறிக்கைகள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. 2018-19 நிதி ஆண்டில் தண்டவாளங்களைப் புதுப்பிக்க ரூ. 9607 கோடி ஒதுக்கப்பட்டது ஆனால் 2019-20 நிதி ஆண்டில் இது ரூ.7417 கோடியாகக் குறைந்துள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில் ரயில்வே தண்டவாளங்களின் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதா என்பது மத்திய அரசாங்கம்தான் தெரிவிக்க வேண்டும்.இதற்கிடையில் ரயில் விபத்துகளைத் தடுக்க 2020 ஆம் ஆண்டு ‘கவச்’ என்கிற சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தானாகவே ரயில் விபத்துகளைத் தடுக்கும்.ஆனால் இந்த சிஸ்டம் நாட்டின் மொத்த ரயில் பாதையில் 3 % பாதையில் மட்டும்தான் நிறுவப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் 2015-இல் இந்திய ரயில்வே துறை குறித்து மத்திய அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் “இந்தியாவின் ரயில் பாதையின் நீளம் 1,14,907 கிலோ மீட்டர்.இதில் வருடாவருடம் 4500 ரயில் பாதைகள் புதுப்பிக்கப் படவேண்டும். ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாகக் கடந்த 6 வருடங்களில் பராமரிப்பு பணிகளின் வேகம் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலை நீடித்தால், மக்கள் ரயிலில் பயணிக்கவே பயப்படுவார்கள்.மேலும் ரயில்வே துறையின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும்.இந்த குறைபாடுகளை மத்திய அரசாங்கம் விரைவாகச் சரிசெய்யவேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரயில் விபத்து வழக்குப்பதிவு – லோகோ பைலட்டிடம் விசாரணை!
வார இறுதியிலும் தங்கம் விலை உயர்வா? இன்று சவரன் எவ்வளவு?
கவரப்பேட்டை விபத்து : பயணிகளின் கவனத்துக்கு… ரத்தான ரயில்களின் விவரம்!