ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இதனால் மீட்பு பணிக்காக ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனர். பாலசோர் ஃபக்கீர் மோகன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 4) மாலை சென்னை திரும்பினர்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ததில் அங்கு யாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. உடல்கள் வைக்கப்பட்ட பிணவறைக்கு சென்றும் விசாரித்தோம். அங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.
அதன்பிறகு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். எங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படவில்லை என்றனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்த 127 பேரில் 28 பேர் தமிழர்கள் என்று சொன்னார்கள். ஒடிசா அரசு அங்கு ஒரு கால் செண்டரை அமைத்திருக்கிறது. அங்கும் சென்று கேட்டோம். தமிழர்களை காணோம் என்று எந்தவிதமான அழைப்பும் வரவில்லை என்று சொன்னார்கள்.
8 பேரை மட்டும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. இப்போது அங்கிருக்கும் அரசு அதிகாரிகள் தெரிவித்த தகவல்படி, 2 பேர் எங்கிருக்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. காலையில் வெளியிட்ட பெயர் பட்டியலில் இருந்த நாரகணி கோபியிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் பாதுகாப்பாக இருக்கிறார்.
மற்றொரு பயணியான ஜெகதீசனிடம் பேசினோம். அவரும் பாதுகாப்பாக இருக்கிறார்.
அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்தி ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக அவர்களுடன் சென்ற பயணிகள் சொன்னதாக ரயில்வே போலீசார்கள் கூறியிருக்கிறார்கள். இந்த 6 பேரிடமும் நாம் பேசிவிட்டால் தமிழகத்தில் இருந்து யாரும் பாதிக்கப்படவில்லை என முடிவுக்கு வரலாம். அவர்களை தொடர்பு கொள்ளவும் முயற்சித்து வருகிறோம். இவர்கள் பயணித்த பி3, பி4, பி7, பி9, எஸ்1, எஸ்2 ஆகிய பெட்டிகளில் வந்தவர்களுக்கு பாதிப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதுவரை ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 88 பேரைத்தான் அடையாளம் காண முடிந்தது. இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். பார்ப்பதற்கே மிகவும் வருத்தமாக இருந்தது. மீண்டும் இதுபோன்ற விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு தளத்துக்கும் சென்று பார்த்தோம். தமிழர்கள் யாரும் இல்லை. ஒடிசா அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பிரதமர் வந்ததால் ப்ரோட்டோகால் காரணமாக விபத்து நடந்த இடத்துக்கு செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. ஹெலிகாப்டரில் புவனேஸ்வரில் இருந்து பாலசோரில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் போது அவ்விடத்தை கடந்து சென்றோம். அப்போது இதுதான் விபத்து நடந்த பகுதி என்று அதிகாரிகள் சொன்னார்கள். ஒடிசாவுக்கு மீட்பு பணிக்காக எந்தவிதமான உதவியாக இருந்தாலும் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்” என்றார்.
பிரியா