மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்று (ஆகஸ்ட் 8) தொடங்கியது. முதலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் முதல் ஆளாக பேசினார்.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது திமுக சார்பில் எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.
பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை அடுக்கிய டி.ஆர்.பாலு, “ஆளும் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் பிரதமர் மோடி உட்பட என்னுடைய பழைய நண்பர்கள் தான். தற்போது அவர்களை எதிர்த்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசுகிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி நாளுமன்றத்துக்கு வருவதில்லை. அவரை வரவைக்க நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதைவிட வேறு வழி இல்லை. அதனால் இந்தியா கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.
தமிழ்நாட்டை பற்றி நான் பேசுகிறேன். 2019 தேர்தலுக்கு முன்னதாக இதே பிரதமர் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னும் அங்கு ஒற்றை செங்கல் மட்டுமே இருக்கிறது.
ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். அப்படி பார்த்தால் இதுவரை 18 கோடி வேலைவாய்ப்புகள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
அதேபோன்று ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்போம் என்றார். ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.
இந்த உலகத்தில் எந்த நாட்டுக்கு சென்றாலும் திருக்குறளை பற்றி பேசுகிறார், திருவள்ளுவரை பற்றி பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை.
15 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஒரு 2,000 கோடி ரூபாய் மதுரை எய்ம்ஸ்க்கு கொடுக்க முடியவில்லையா?
ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நிபந்தனைகளை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்திய அரசு இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கச்சத்தீவை மீட்க பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தவறிவிட்டது.
சேது சமுத்திர திட்டம் என்ன ஆனது, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், சோனியா காந்தி தொடங்கி வைத்த திட்டம் என்பதால் அது கிடப்பில் போடப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதற்காக அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தை உலகமே பாராட்டியது. 160 ஆண்டு பழமையான திட்டம் இது.
ஆனால் சங்பரிவார் அமைப்பால் இந்த திட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது” என குறிப்பிட்டார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய அவர், “பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூரில் 143 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 65,000 பேர் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் முதல்வர் உதவியற்றவராக இருக்கிறார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும் வருவதில்லை. மணிப்பூருக்கும் செல்லவில்லை. இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுபோன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்திருப்பதாக அந்த மாநில முதல்வர் கூறுகிறார்.
ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் மணிப்பூரில் நடக்கும் சட்ட விரோதத்தை கண்டித்து பாஜக தலைமையிலான அரசாங்கத்தை குற்றம்சாட்டின” என்று சுட்டிக்காட்டினார் டி.ஆர்.பாலு.
இதுபோன்ற சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமரான மோடியால் எப்படி நாடாளுமன்றத்துக்கு வராமல் இருக்க முடிகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், “எனது மாநிலத்தில் ஒருவர் இருக்கிறார். சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. முதல்வர் எதிர்க்கட்சிகள் எல்லாம் அவையில் இருக்கிறார். ஆனால் இந்த மனிதர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே அவையிலிருந்து வெளியேறினார். இது வெட்கக்கேடானது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று ஆளுநரை பற்றி குறிப்பிட்டார் டி.ஆர்.பாலு.
பிரியா
விஜய் பட இயக்குநரின் உடல்நிலை கவலைக்கிடம்!
கொலை செய்ய முயன்ற தந்தை: புத்திசாலித்தனமாக உயிர் பிழைத்த சிறுமி!