தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நாளை (ஜனவரி 12) குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் மீதான சர்ச்சைகளும் தொடங்கி விட்டன.
காரணம் ஆளுநர் உரையாற்றும் போது, அரசு தயாரித்த உரையை முறையாக வாசிக்காமல், சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளைத் தவிர்த்தும், புதிதாக சில வார்த்தைகளைச் சேர்த்தும் உரையை வாசித்தார்.
தொடர்ந்து ஆளுநர் ஆங்கிலத்தில் வாசித்த உரையைச் சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்து முடித்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
ஆளுநரால் இணைத்து, விடுத்துப் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்னும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதை வாசித்துக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஆளுநர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நாளை (ஜனவரி 12) காலை 11.45 மணியளவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து புகார் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஆளுநர் உரையில் அதிகளவில் பொய்யான தகவல் : அண்ணாமலை
ஆன்லைன் ரம்மி- 40 ஆவது தற்கொலை: ஆளுநருக்கு அப்பால் அன்புமணி புது யோசனை!