நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குறித்து பேசியது அவதூறான குற்றச்சாட்டு என்பதால் அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தில் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “இந்தியா என்றால் வட இந்தியா தான் என்று தமிழ்நாட்டில் திமுக அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி பதிலளிப்பாரா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் மோடி நேற்று பேசியபோது, “காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக அமைச்சர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியா ஒரு பொருட்டே இல்லை என்று கூறியிருக்கிறார். அவரை பொறுத்தவரை தமிழ்நாடு என்பது பாரத தேசத்திலேயே இல்லை என நினைக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “நான் பேசியதை முழுமையாக அறியாத சிலர் அரசியல் விளம்பரத்திற்காக எதையோ பேசி விட்டு போகட்டும். பிரதமர் கூடவா முழுமையாக எதையும் தெரிந்து கொள்ளாமல் இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது பரிதாமும் வேதனையும் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் எ.வ.வேலு குறித்து பேசியது அவதூறான குற்றச்சாட்டு என்பதால் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் “மக்களவையில் ஆகஸ்ட் 9 மற்றும் 10-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சை தவறாக மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னை அண்ணாசாலை தேவநேய பாவாணர் நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எ.வ.வேலு பேசிய வீடியோவை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு மக்களவை உறுப்பினர் இல்லாத நிலையில் சபாநாயகருக்கு போதிய முன்னறிவிப்பு இல்லாமல் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் எ.வ.வேலு குறித்து அவையில் பேசியது அவதூறான குற்றச்சாட்டு என்பதால் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை? வானிலை மையம் தகவல்!
ஓபிஎஸ் தலைமையில் ஆகஸ்ட் 20-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!