முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இன்று (ஜூன் 1) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு,
“நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? தேர்தல் முடிவுகளின் போது களப்பணியாளர்கள் எப்படி பணியாற்ற வேண்டும்? என்ற கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று ஒவ்வொரு கட்சிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தன.
அந்த அடிப்படையில் பார்த்தால் மிகப்பெரிய வெற்றி இந்தியா கூட்டணிக்கு காத்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
அதேநேரத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருந்த பாஜக, படுதோல்வி அடையும் என்ற நல்ல முடிவும் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் நான்காம் தேதிக்கு முன்னால், தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் உள்ள அலுவலர்கள் எப்படி செயலாற்ற வேண்டும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தும்படி கோரிக்கை வைக்க உள்ளோம்.
நான்காம் தேதி இரவிற்குள் அல்லது ஐந்தாம் தேதி அதிகாலைக்குள் அனைத்து இந்தியா கூட்டணி தலைவர்களும் டெல்லியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்று அந்தந்த கட்சி தலைவர்கள் குடியரசு தலைவருக்கு எழுதி கொடுப்பது பற்றியும், பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது பற்றியும் அன்று முடிவு செய்யப்படும். ஆகவே, இந்தியா கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, “முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான திட்டம் இருந்தது. அந்தநேரத்தில் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. என்ன காய்ச்சல் என்று தெரியவில்லை?
இந்த காலத்தில் என்ன காய்ச்சல் வரும் என்று தெரியாது. டெல்லிக்கு சென்றால் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படும் என்று நாங்கள் அட்வைஸ் செய்தோம். அதைக்கேட்டுக்கொண்ட முதல்வர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இன்று அல்லது நாளைக்குள் அவருக்கு உடல்நிலை சரியாகிவிடும்” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சந்தைக்கு வந்த தாய்ப்பால்… எங்கே போகிறது தமிழ்நாடு? ஷாக் ரிப்போர்ட்!
12 வருடங்களுக்கு முன்பு… விக்னேஷ் சிவன் எமோஷனல்!