சுற்றுலாத் துறை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து தமிழக அமைச்சர் ராஜேந்திரன் பேசியநிலையில், சில மணி நேரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலங்கள் உருவாக்கத் திட்டமிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு எல்லா மாநிலங்களுக்கும், அவர்களது மாநிலத்தில் புதிய சுற்றுலாத் தலங்கள் உருவாக்குவதற்கான திட்ட முன்மொழிவை மத்திய சுற்றுலாத் துறைக்கு அனுப்புமாறு கூறியிருந்தது.
இதற்கு ரூ. 8000 கோடி நிதி தேவைப்படுகிற 87 திட்ட முன்மொழிவுகள் மத்திய சுற்றுலாத் துறைக்கு பல்வேறு மாநிலங்கள் அனுப்பிவைத்தன.
இதற்கிடையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று (நவம்பர் 28) காலை டெல்லி சென்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேக்காவதைச் சந்தித்தார். இந்த சந்திப்பில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை தொடர்பான கோரிக்கைகளை கஜேந்திர சிங் சேக்காவத்திடம் அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்தார். இந்த சந்திப்பில் எம்.பி. திருச்சி சிவாவும் உடனிருந்தார்.
அதில் மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் (2.0) திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கான ரூபாய் 30.02 கோடி,
நீலகிரி மாவட்டம் இயற்கை சுற்றுலாத் தலம் பைக்கராவில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்திடும் திட்டத்திற்கு ரூபாய் 28.3 கோடி,
மத்திய அரசின் சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ், மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.99 கோடி ஒதுக்கீடு.
உதகமண்டலம் தேவலாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூந்தோட்டம் அமைத்திட ரூ.72.58 கோடி, ராமேஸ்வரத்தினை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.99 கோடி உள்ளிட்ட பல திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட 87 திட்டத்தில் 40 திட்டத்திற்காக நிதி ஒதுக்கியிருப்பதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் நேற்று இரவு தெரிவித்துள்ளார்.
இந்த 40 திட்டங்கள் 23 மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ளன. மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த சிறப்பு நிதி உதவி திட்டம் 50 வருடத்திற்கு வட்டியில்லாத கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.170 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.99.67 கோடி மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் திட்டத்திற்கும், ரூ.70.23 கோடி உதகமண்டலம் தேவலாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூந்தோட்டம் அமைக்கும் திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் ரூ.112.13 கோடிக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 75% பணம் செலவு செய்யப்பட்ட பின்பு மீதி பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டங்ஸ்டன் சுரங்கம் : அமைச்சர் வாக்குறுதியால் போராட்டம் வாபஸ்!
ஃபெங்கலா அல்லது ஃபெஞ்சலா? : புயல்களுக்கு யார் பெயரிடுகிறார்கள்?
கல்வித்துறையில் மட்டும் ரூ.1100 கோடி இழப்பு : அரசு வழக்கறிஞர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!