ஊட்டியில் ஆளுநர்
நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் திங்கட்கிழமை தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் ஊட்டி சென்றுள்ளார். ஆளுநர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.என்.ரவி இன்று ராஜ்பவன் மாளிகையில் இது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுகிறார்.
ஐபிஎல் ஃபைனல்ஸ்
2024 ஆம் ஆண்டின் ஐபில் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக சேப்பாக்கம் பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது.
ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கான இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ரீமால் புயல்-கொல்கத்தா விமான நிலையம் மூடல்!
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஏற்கனவே ரீமால் என பெயரிடப்பட்டிருக்கிறது. இது தீவிர புயலாக வலுப்பெற்று இன்று நள்ளிரவு வங்காள தேசத்துக்கும், மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று நண்பகல் 12 மணியில் இருந்து கொல்கத்தா விமான நிலையம் தற்காலிகமாக சுமார் ஒரு நாள் மூடப்படுகிறது. இந்த புயலால் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப் பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிவுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் 2024-25 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 5 ஆம் தேதி என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருக்கிறது. அனைத்துப் பள்ளிகளையும் திறப்பதற்கான ஆயத்தங்களும், பள்ளி வாகனங்கள் ஆய்வும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
கேன்ஸ் திரை விழாவில் சாதித்த இந்திய நடிகை
கொல்கத்தாவில் பிறந்த நடிகை அனசுயா சென்குப்தா, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்று வரலாறு படைத்துள்ளார். பல்கேரிய இயக்குனர் கான்ஸ்டான்டின் போஜனோவின் ‘தி ஷேம்லெஸ்’ படத்தில் சென்குப்தாவின் பாத்திரத்திற்காக Un Certain Regard பிரிவில் இந்த விருது கிடைத்துள்ளது.
பல்கேரிய இயக்குனரான கான்ஸ்டான்டின் போஜனோவின் ‘தி ஷேம்லெஸ்’ திரைப்படத்தில் பாலிவுட் காவலரைக் கொன்றுவிட்டு டெல்லி விபச்சார விடுதியில் இருந்து தப்பிச் செல்லும் பாலியல் தொழிலாளியாக நடித்ததற்காக அனசுயா சென்குப்தாவுக்கு அன் செர்டெய்ன் ரிகார்ட் பிரிவில் கிடைத்துள்ளது.
நிரம்பும் கர்நாடக அணைகள்- அதிகரிக்கும் ‘மேட்டூர்’ நம்பிக்கை!
வழக்கமாக ஜூன் 12 இல் டெல்டா விவசாயத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த நிலையில்… கர்நாடகாவில் குடகு, மைசூரு ஆகிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 5 மணி நிலவரப் படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 2,509 கன அடி. கபினி அணைக்கு வினாடிக்கு 6,473 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்தால் இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து மேட்டூரின் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என நீர்வளத் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இன்றைய வெப்பம்!
கடந்த வாரம் தமிழகம் முழுதும் பரவலாக கோடை மழை பலமாக பெய்தாலும், ஓரிரு நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்துக் கொண்டுள்ளது.
இன்று இயல்பான வெப்பமும் நாளை முதல் 29 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்பமும் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு சதவிகிதம்!
மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு டெல்லி, ஹரியாணா, பீகார்,, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மே 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகின என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 78.19%, குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 51.41% வாக்குகள் பதிவாகின.
தென் தமிழகத்தில் போராட்ட ஆயத்தம்!
முல்லைப் பெரியாறு அணையை இடிக்க அனுமதி வேண்டியும், புதிய அணையை கேரளாவே கட்டிக் கொள்ளும் என்றும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கேரள அரசு கடிதம் எழுதிய நிலையில், இந்த கடிதத்தை நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
கேரள அரசுக்கு எதிராக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள பெரியாறு, வகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். அதற்கான ஆயத்த கூட்டங்களை இன்று நடத்துகிறார்கள். கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 71-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
ஹெல்த் டிப்ஸ்: புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு இதை அவசியம் சொல்லிக் கொடுங்கள்!
கிச்சன் கீர்த்தனா சண்டே ஸ்பெஷல்: உயிருள்ள ஊறுகாய் பற்றி தெரியுமா உங்களுக்கு?