மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு!
பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இன்று (மே 22) வெளியிட்டார்.
கர்நாடக சட்டசபை!
கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்றதை அடுத்து, முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடவுள்ளது. இந்த சட்டசபை கூட்டம் மே 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
காங்கிரஸ் ஆலோசனை!
கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டசபைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைமை இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
அதிமுக பேரணி!
தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிராக அதிமுகவினர், அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆளுநர் மாளிகை வரை பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.
முதல்வர் சிங்கப்பூர் பயணம்!
வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் செல்கிறார்.
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!
பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி!
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 366வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’போர் தொழில்’ டீசர்!
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’ படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.