செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தீர்ப்பு!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 20) தீர்ப்பு வழங்க உள்ளது.
33% இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம்!
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று மக்களவைவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மசோதா மீதான விவாதம் நடைபெற உள்ளது.
பிரதமரை சந்திக்கும் கர்நாடக எம்.பிக்கள்!
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக எம்.பிக்கள் இன்று பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
கர்நாடக அரசு ஆலோசனை!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் தலைமையில் அம்மாநில எம்.பிக்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். மேலும் தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.
சீமான் வழக்கு விசாரணை!
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 487வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி மகள் இறுதிச்சடங்கு!
தற்கொலை செய்து கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது.
தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி!
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று 2வது கேலோ இந்தியா பெண்கள் தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை பாடல்!
ஐசிசி உலகக் கோப்பை அஃபிஷியல் ஆன்த்தம் (official anthem) இன்று மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளது.