மகளிர் உரிமை தொகை தொடக்க விழா!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரத்தில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
அண்ணா பிறந்தநாள்!
மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று.
மாஹேவில் விடுமுறை!
நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியம் மாஹே பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை நீட்டிப்பு!
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இரவு 8 மணி முதல் 10 மணி வரை 9 நிமிட இடைவெளிக்குப் பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 482வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்க் ஆண்டனி ரிலீஸ்!
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
அநீதி ஓடிடி ரிலீஸ்!
அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் வெளியான அநீதி திரைப்படம் இன்று ஆஹா மற்றும் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஆசியக் கோப்பை!
ஆசியக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.