திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (ஜனவரி 24) நடைபெறுகிறது.
நகர்ப்புற கூட்டுறவு நிதி அலுவலகம் திறப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திறந்து வைக்கிறார்.
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தேமுதிக ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியும் சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருமயம் தாலுகா அலுவலகம் முன்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சிறப்பு ரயில் இயக்கம்!
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும் ஜனவரி 26-ஆம் தேதியும் சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த வார ரிலீஸ்!
மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’, சுந்தர் சி நடித்துள்ள ‘வல்லான்’, யோகி பாபுவின் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’, குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’, யூடியூபர் ஹரி பாஸ்கரின் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’, ‘பூர்வீகம்’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டான்செட் நுழைவுத் தேர்வு!
முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வானிலை நிலவரம்!
தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குடியரசு தினம் ஒத்திகை நிகழ்ச்சி!
76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று கடைசி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.