டெல்லி தேர்தல் மோடி ஆலோசனை!
பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் இன்று (ஜனவரி 22) காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார்.
மருது சகோதரர்கள் சிலை!
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கும் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய அமைச்சருடன் சந்திப்பு!
மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புக் குழுவினர் டெல்லியில் இன்று சந்திக்கின்றனர்.
ஆளுநர் ரவி வழக்கு!
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் ரவி தடையாக இருப்பதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சீமான் வீடு முற்றுகை!
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று முற்றுகையிடுகின்றனர்.
அரசு பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழா!
தமிழகத்தில் 100 ஆண்டுகளைக் கடந்த 2,238 அரசு பள்ளிகளில் இன்று நூற்றாண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நூற்றாண்டு திருவிழாவை இன்று தொடங்கி வைக்கிறார்.
2K Love Story டிரைலர்!
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெயபிரகாஷ், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2K Love Story படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
இந்தியா – இங்கிலாந்து மோதல்!
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.