டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு!
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. இனி நம் நாடு உலகம் முழுவதும் மதிக்கப்படும்” என்று நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஸ்டாலின் சிவகங்கை பயணம்!
முதல்வர் ஸ்டாலின் இன்றும் நாளையும் (ஜனவரி 21, 22) சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 46 பேர் போட்டி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எட்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். இதனையடுத்து திமுக, நாதக உள்ளிட்ட 46 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கள் விடுதலை மாநாடு!
தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று கள் விடுதலை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பனையேறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றுகிறார்.
வானிலை நிலவரம்!
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
‘DD Next Level’ ஃபர்ஸ்ட் லுக்!
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘DD Next Level’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
அறுபடை வீடு ஆன்மீக பயணம்!
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மீக பயணத்தின் மூன்றாம் கட்ட பயணம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை 0.13 பைசாக்கள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
யுஜிசி தேர்வு!
ஜனவரி 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
சந்தானம் பிறந்தநாள்!
நடிகர் சந்தானம் இன்று தனது 45-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.