மாட்டுப் பொங்கல்!
வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இலங்கை, சீன அதிபர்கள் சந்திப்பு!
சீனாவிற்கு நான்கு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மூன்று அதிநவீன கப்பல்கள்!
இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ் நீலகிரி, ஐ.என்.எஸ் வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
காங்கிரஸ் புதிய தலைமையக கட்டிடம்!
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிடமான இந்திரா பவனை டெல்லியில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு!
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
சிறப்பு ரயில் முன்பதிவு!
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஜனவரி 19-ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
டாஸ்மாக் விடுமுறை!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு!
இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வை மாற்றக்கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.