மன்மோகன் சிங் மறைவு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (டிசம்பர் 26) இரவு உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார். மன்மோகன் சிங் மறைவுக்கு மத்திய அமைச்சரவை இன்று (டிசம்பர் 27) காலை 11 மணிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுகிறது. இன்று முதல் ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!
சென்னை கிண்டி அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மன்மோகன் சிங் மறைவை ஒட்டி அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அண்ணாமலை கவன ஈர்ப்பு போராட்டம்!
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பாக இன்று சாட்டையால் அடித்துக்கொள்ளும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
புத்தகக் கண்காட்சி!
சென்னை 48-ஆவது புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
விடாமுயற்சி முதல் பாடல் ரிலீஸ்!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.
பரங்கிமலை சத்யபிரியா கொலை வழக்கில் தீர்ப்பு!
கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் சத்யபிரியா என்ற பெண்ணை சதீஷ் என்பவர் ரயில் முன்பாக தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திர, வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்தது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மார்கழியில் மக்களிசை!
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை இன்று முதல் டிசம்பர் 29-ஆம் தேதி வரை சென்னை மயிலாப்பூரில் நடைபெறுகிறது.
இந்த வார தியேட்டர் ரிலீஸ்!
சரத்குமார் நடித்துள்ள தி ஸ்மைல் மேன், சமுத்திரக்கனி நடித்துள்ள திரு.மாணிக்கம், தம்பி ராமையா மகன் உமாபதி நடித்துள்ள ராஜாகிளி, எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள அலங்கு ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…