ஒரே பாலின திருமணம்!
ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 17) தீர்ப்பு வழங்க உள்ளது.
முதல்வர் கள ஆய்வு!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்றும் நாளையும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக 52ஆவது ஆண்டு விழா!
அதிமுக 52ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தொகுதிவாரியாக 4 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மீன்வள மேலாண்மை மாநாடு!
மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச மீன்வள மேலாண்மை மாநாடு இன்று தொடங்குகிறது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
திறனறித் தேர்வு!
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை திறனறி தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 514வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லியோ வழக்கு விசாரணை!
லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் இன்று.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 15வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…