நீர் சேகரிப்பு முன் முயற்சி திட்டம்!
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று (செப்டம்பர் 6) ‘நீர் சேகரிப்பு மக்கள் பங்கேற்பு முன்முயற்சி’ தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள்!
சுபமுகூர்த்த நாளான இன்று அதிக ஆவணங்கள் பதிவுக்கு வரும் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகத்தில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
தங்கம் தென்னரசு மனு விசாரணை!
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்ட நிலையில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
சிறப்பு பேருந்துகள்!
விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாகத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பெண்கள் நடத்தும் கும்பாபிஷேகம்!
தஞ்சை , திருவிடைமருதூர் அடுத்த திருபுவனம் இந்திரா நகரில் உள்ள ஆதிசக்தி அம்மன் கோயிலில் தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்களே நடத்தும் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.
மதுரையில் புத்தகத் திருவிழா!
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா இன்று தமுக்கம் அரங்கத்தில் தொடங்குகிறது. வரும் 16ம் தேதி வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்!
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மட்கானில் இருந்து இன்று பகல் 12.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 01007) மறுநாள் பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து நாளை இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 01008) மறுநாள் இரவு 11 மணிக்கு மட்கான் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
மழை அப்டேட்!
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 11ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 173ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாராலிம்பிக் போட்டிகள்!
பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கயாக் ஒற்றையர் 200 மீ – கேஎல்1 ஹீட்ஸ் போட்டி, ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தியேட்டருல ஜாலி… ஆபிஸே காலி : அப்டேட் குமாரு
சுப முகூர்த்தம் : பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு!
கோட் முதல்நாள் வசூல் : கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த இந்தி!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம்? : கமிஷனர் அருண்