காற்றழுத்த தாழ்வு பகுதி!
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 5) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
ஆசிரியர்கள் தினம்!
இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
சிங்கப்பூரில் பிரதமர் மோடி
பிரதமர் மோடி புருனே நாட்டில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்ற நிலையில் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து அதிபர் தர்மன் சண்முக ரத்னத்தை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார் மோடி.
கோட் ரிலீஸ்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ படம் இன்று ரிலீஸ் ஆகிறது. படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு படம் வெளியாகிறது.
அதிமுக ஆர்ப்பாட்டம்!
திமுக ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு!
சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (58 வது முறை) முடிவடைகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது யூனியன் வங்கியின் கரூர் கிளை முன்னாள் மேலாளரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஆசிரியர்களுக்கு விருது!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 386 ஆசிரியர்களுக்கு இன்று மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு விருதுகளை வழங்க உள்ளார்.
சினிமாவில் 5 ஆண்டுகளுக்கு தடை!
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலியல் புகாரில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள்
சுதேசி கொள்கையில் உறுதியாக இருந்த, தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் இன்று.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 172வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை!
துரைமுருகன் இதயம் எப்படி இருக்கிறது? சிங்கப்பூர் டாக்டர் ரிப்போர்ட்!
மாடர்ன் தியேட்டர்ஸ் தந்த இசை விருந்து ’வண்ணக்கிளி’!
‘கோட்’ டிக்கெட் 1000 ரூபாயா? தவிக்கும் விஜய் ரசிகர்கள்!