புனித நீராடும் குடியரசு தலைவர்!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் இன்று (பிப்ரவரி 10) பங்கேற்கும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். top ten news tamil
ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கு!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தலையிடுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அமைச்சரவை கூட்டம்!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 2025 – 2026 பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு கலந்தாய்வு கூட்டம்!
சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்டு ஓட்டலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
விண்வெளி கண்காட்சி!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் யலெஹங்கா விமானப்படை தளத்தில் ஏரோ இந்தியா விண்வெளி கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்.
உள்ளூர் விடுமுறை!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெறுவதால் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கவின் புதிய படம் அப்டேட்!
சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மோதல்!
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. top ten news tamil