தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கார்கே சந்திப்பு!
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 20 பேரை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (ஆகஸ்ட் 4) டெல்லியில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
ராகுல் வழக்கு!
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்!
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அண்ணாமலை நடைபயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் 8-ஆவது நாள் நடைபயணம் இன்று மதுரை மாவட்டம் மேலூர் முதல் சோழவந்தான் வரை நடைபெறுகிறது.
விவசாயிகளுக்கு என்எல்சி இழப்பீடு!
என்எல்சி பரவனாறு நிரந்தர மாற்று பாதை அமைக்கும் பணியின் போது சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று முதல் இழப்பீடு வழங்கப்படுகிறது.
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது.
ஓவியர் சந்ரு நூல் வெளியீட்டு விழா!
ஓவியர் சந்ரு எழுதிய சாதி கெட்ட கலை, கெட்ட சாதி கலை, கலை கெட்ட சாதி என்ற நூலை விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிடுகிறார்.
ராமநதி அணை திறப்பு!
தென்காசி ராமநதி அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 440-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சுப்ரமணியபுரம் ரீ ரிலீஸ்!
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் திரைப்படம் இன்று மறு திரையிடல் செய்யப்படுகிறது.
ஆசிய ஹாக்கி போட்டி!
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் கொரியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.