15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷாவை போலீசார் இன்று (ஜனவரி 13) கைது செய்தனர்.
பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார்.
இவர் மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் அளித்தார்.
அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக நிர்வாகி ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வருகிறது. என்றும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, கடனை அடைத்து விடுவதாக கூறிய பாஜக நிர்வாகியுடன் தகாத உறவு கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பைக் வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தைக் கூறி மனைவியின் மூலமாக மகளிடமும் ஷா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், வாட்ஸ் அப் மூலமாக தொடர்ந்து ஆபாச மெசேஜ்களையும் அனுப்பி உள்ளார் எனவும் புகார் மனுவில் சிறுமியின் தந்தை குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், பாஜக பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மீதும், சிறுமியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மக்களவை தேர்தல் சமயத்தில் பதியப்பட்ட இந்த வழக்கால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தலைமறைவான ஷாவையும் போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்போது ஷாவையும் கைது செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’பாஜகவின் கருத்துகளை தான் சீமான் பேசுகிறார்’ : தமிழிசை தடாலடி!
முதல்வருக்கு ஆணவமா? : ஆளுநருக்கு தக் ரிப்ளை கொடுத்த துரைமுருகன்