அதிமுக அலுவலகம் இன்று திறப்பு!
உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி இன்று ( ஜூலை 21) காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் மீண்டும் திறக்கப்படுகிறது. அதன் சாவியை இபிஎஸ்ஸின் மேனேஜரிடம் வருவாய் துறையினர் ஒப்படைக்க உள்ளனர். கடந்த 11ம் தேதி நடைபெற்ற வன்முறை காரணமாக அதிமுக அலுவலகம் சீல்வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், அனைத்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீமதி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு அவரது வீட்டில் வருவாய் துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்த நிலையில், அவர்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணை நடைபெற உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
2 வது நாளாக தொடரும் சோதனை!
மதுரை, திண்டுக்கல்லில் அன்னைபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி என்ற பெயர்களில் உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இன்று காலை முதல் 2வது நாளாக அங்கு மீண்டும் சோதனை தொடர்ந்து வருகிறது.
நேஷனல் ஹெரால்டு முறைகேடு – சோனியா காந்தி இன்று ஆஜர்!
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தியிடம் பல நாட்கள் தொடர்ச்சியாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைப்பு!
இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு ஜூலை 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு!
இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவி ஏற்க உள்ளார். நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான ரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
உலகக்கோப்பையில் இந்தியா முதலிடம்!
தென்கொரியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பெற்று தொடரை நிறைவு செய்துள்ளது. இந்தியா இத்தொடரில் 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
உலக வாள்வீச்சு : பவானி தேவி தோல்வி
எகிப்தில் நடைபெற்று வரும் உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பவானிதேவி 2வது சுற்றில் ஜெர்மனியில் லாரிசா எய்ஃப்லர்டம் 12-15 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.