கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்!
காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக அரசு இன்று (ஆகஸ்ட் 21) பதில் மனு தாக்கல் செய்கிறது.
பசுமை நல்கை திட்டம் தொடக்கம்!
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
7 மாவட்டங்களுக்கு கனமழை!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடி கலந்தாய்வு!
கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கு இன்று நேரடி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
பி.ஆர்க் படிப்பு கலந்தாய்வு!
அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை பெற பொது பிரிவினருக்கு இன்று முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
4 ஆண்டுகளுக்கு பின்..
நான்கு ஆண்டுகளுக்கு பின் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதில் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்!
ஆறாவது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 19 ஆண்டுகளுக்கு பின், கோபி பவளமலை முருகன் கோவிலில், இன்று பாலாலயம் நடைபெறுகிறது.
படப்பிடிப்பு துவக்கம்!
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவியின் ’JR33’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை மாற்றம்!
சென்னையில் இன்று 457வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
உசேன் போல்ட் பிறந்தநாள்!
பதினொரு முறை உலக சாம்பியனும், எட்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கமும் வென்ற ’உலகின் மின்னல் வேக தடகள வீரர்’ என வர்ணிக்கப்படும் ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட்டுக்கு இன்று பிறந்த நாள்.